Last Updated : 24 Mar, 2019 08:08 PM

 

Published : 24 Mar 2019 08:08 PM
Last Updated : 24 Mar 2019 08:08 PM

இரு சிறுமிகளைக் கடத்தி மதமாற்றம் பண்ணியிருக்காங்க; நீங்க ஏன் சார் டென்ஷன் ஆகறீங்க: பாக்.அமைச்சரை வெளுத்துவாங்கிய சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இரு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து சுஷ்மா அறிக்கை கேட்டது தொடர்பாக பெரும் வார்த்தைப் போரே நடந்தது.

ட்விட்டரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் மூத்த அமைச்சர்களிடையே இந்த வார்த்தைப்போர் நடந்தது.

சில தினங்களுக்குமுன், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் மாலை வேளையில், பாகிஸ்தானில் ரவீனா (13) ரீணா (15) ஆகிய இரு டீன் ஏஜ் பெண்களைக் கடத்தி மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள அப்பெண்களின் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அப்பெண்களை கடத்திச் சென்றது. பின்னர் அவ்விரு பெண்களுக்கும் ஒரு முஸ்லிம் மதகுரு நிக்காஹ் எனப்படும் திருமணச்சடங்கை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இன்னொரு தனி வீடியோவில் இரு பெண்களும் தாங்கள்  சொந்த விருப்பத்தின்பேரில் இஸ்லாமுக்கு மதம் மாறுவதாக பேசும் வீடியோவும் வெளியானது.

இவ்விரு பெண்களும் இந்துப் பெண்கள் என்பதால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட்டரில் ஊடகச் செய்திகளை பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு இணைத்து இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், சுஷ்மாவின் ட்விட்டரில் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சவுத்ரி குறுக்கிட்டு, ''இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை'' என்று ஒரு கருத்தை வழங்கியிருந்தார்.

சவுத்ரியின் அவசர குறுக்கீட்டுக்குப் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ்,  ''மிஸ்டர் மினிஸ்டர், இரண்டு சிறிய இந்துச் சிறுமிகளை கடத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அப்பெண்களை கட்டாய மதமாற்றமும் செய்து திருமணம் நடத்தியிருக்கிறார்கள். இதுபற்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரிடம் ஒரு அறிக்கையை நான் கேட்டேன். இதனால் நீங்கள் டென்ஷனாகி நிலைகுலைந்தது போதும். உங்கள் குற்ற உணர்ச்சியைத்தான் இது காட்டுகிறது'' என்றார்.

இதற்கு உடனே பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி பதில் அளித்தார்.

''மேடம், மற்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக நீங்கள் கவலைப்படுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் உங்களது உள்நாட்டுக்குள்ளும் சிறுபான்மையினரிடத்தில் இதே அக்கறை வெளிப்பட வேண்டும். குஜராத் மற்றும் காஷ்மீரில் நடந்தவற்றுக்கு நீங்கள் கவலைப்பட உங்கள் மனசாட்சி அனுமதிக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்'' என்றார்.

பெண்களை மீட்க இம்ரான்கான் உத்தரவு

இரு நாடுகளின் மூத்த அமைச்சர்களிடையே இந்த ட்வீட் வார்த்தைப் போர் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க பாக்.பிரதமர் இம்ரான் கான் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு ஆணை பிறப்பித்ததோடு, உடனடியாக அப்பெண்களை விடுவித்து மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x