Published : 15 Nov 2018 08:17 AM
Last Updated : 15 Nov 2018 08:17 AM

அதிபரின் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: ட்விட்டரில் வாழ்த்தியபோது இந்துக்களை மறந்த ட்ரம்ப்

இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் தீபாவளி கொண்டாடப் பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப்பும், வெள்ளை மாளிகையில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாடினர்.

இந்த ஆண்டு தீபாவளியின் போது தேர்தல் சுற்றுப் பயணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால், வெள்ளை மாளிகை யில் கொண்டாட்டம் நடைபெற வில்லை. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் வரலாற்று சிறப்பு மிக்க ரூஸ்வெல்ட் அறையில் நேற்று நடந்த தீபாவளி கொண் டாட்ட நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் விளக்கேற்றினார்.

பின்னர் ட்விட்டரில் ட்ரம்ப் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘இன்று தீபாவளி கொண்டாட் டத்துக்காக கூடியிருக்கிறோம். புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயினர்கள் கொண்டாடும் தீபாவளி ஒளி திருநாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இந்த ட்விட்டர் வாழ்த்தில் இந்துக்களை அதிபர் ட்ரம்ப் குறிப்பிடவில்லை. இதற்கு உடனடி யாகப் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சிஎன்என் செய்தியாளர்கள் மனு ராஜு ட்விட்டரில் கூறும்போது, ‘‘இந்துக்கள் பெரும்பான்மையினர் கொண்டாடுவது தீபாவளி’’ என்று குறிப்பிட்டார். இதையடுத்து, உடனடியாக தனது ட்விட்டர் வாழ்த்து செய்தியை நீக்கிவிட்டு வேறு ஒரு பதிவை வெளியிட்டார் ட்ரம்ப். அதிலும் இந்துக்கள் என்ற வார்த்தை மீண்டும் இடம்பெறவில்லை.

அதைப் பார்த்த சிஎன்என் மனு ராஜு, ‘‘அதிபர் ட்ரம்ப்பின் 2-வது ட்விட்டர் வாழ்த்திலும் இந்துக்கள் பெயர் இடம்பெறவில்லை’’ என்பதைச் சுட்டிக் காட்டினார். இதையடுத்து அந்த ட்விட்டையும் நீக்கிவிட்டு, 3-வதாக ஒரு ட்விட்டை வெளியிட்டார் ட்ரம்ப். அதில், ‘‘இந்துக்களின் பண்டிகை தீபாவளியை கொண்டாடுவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய மரியாதை’’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x