Published : 16 Nov 2018 02:03 PM
Last Updated : 16 Nov 2018 02:03 PM

ஜமால் கொலையில் இளவரசருக்கு தொடர்பில்லை: சவுதி

ஜமால் கொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இல்லை என்று சவுதி அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சவுதியைச் சேர்ந்த 21 பேரில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருப்பதாக வியாழக்கிழமை சவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த கொலை வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு  தொடர்பு ஏதும் இல்லை என்றும். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தவறான வாக்குமூலத்தை கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி ஊடகத் துறை அமைச்சர் அவாத் அல் அவாத் கூறும்போது, ”சவுதி தலைமை இந்த வழக்கில் உண்மையை கொண்டு வந்துள்ளது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இதனைத் தொடர்ந்து  துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் ஜமால் கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரையும் துருக்கி வெளியிட்டது.

ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய துருக்கி, ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் புகார்களை அடுக்கியது.

ஜமால் கொல்லபட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்த சவுதி, துருக்கி வெளியிட்ட தொடர் ஆதாரங்களால் அவர் கொல்லப்பட்டதை சவுதி ஒப்புக்கொண்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சவுதி அரசு, இளவரசரை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x