Published : 16 Nov 2018 09:53 PM
Last Updated : 16 Nov 2018 09:53 PM

விபத்தில் இறந்த உரிமையாளருக்காக 80 நாட்களாக சாலையில் காத்திருக்கும் நாய்: வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்

பாசம் காட்டுவதில் மனிதர்களைவிட விலங்குகள் விஞ்சி நிற்கும் சம்பவங்கள் நம்மை நெகிழ்ச்சியூட்டும். சில நேரங்களில் மனிதர்களைவிட நாய்கள் விசுவாசம் மிகுந்தவையாகப் பார்க்கப்படுகிறது. தனது இறந்துபோன எஜமானருக்காக விசுவாசமுள்ள நாய் ஒன்று 83 நாட்கள் அவர் இறந்த இடத்திலேயே காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

சீனாவில் தெற்குப்பகுதியில் உள்ள ஹோஹாட் எனும் நகரில் விபத்தில் இறந்த தனது உரிமையாளர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் அந்த நாய் காத்திருக்கிறது.

இந்த நிகழ்வை எடுத்த ஒருவர் அந்த காணொளியை வலைதளத்தில் பதிவிட,  நாயின் புகைப்படமும், வீடியோவும் சமூக ஊடகங்களில் இதுவரை 60 லட்சம் மக்களால் பார்த்து பகிரப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.

சீனாவின் தெற்குப் பகுதியில் மங்கோலியாவின் உட்பகுதியில் உள்ள நகரம் ஹோஹாட். இந்த நகரைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சாலை விபத்தில் இறந்து போனார். ஆனால், அவர் வளர்த்த நாய், எஜமானார் வருவார் என்ற நம்பிக்கையில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதியில் இருந்து அவர் இறந்த இடத்திலேயே காத்திருக்கிறது.

இந்தநாய் குறித்து டாக்சி ஓட்டுநர் குவோ ஜின்குவா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இந்த நாய் ஏறக்குறைய 3 மாதங்களாக இதே இடத்தில் அமர்ந்திருக்கிறது, மழை, வெயில், பனியிலும் எங்கும் செல்லாமல் இங்கேயே காத்திருக்கிறது. இந்த நாயின் செயல் கண்ணீரை வரவழைக்கிறது. உரிமையாளர் இனி வரமாட்டார் என்று அழைத்தாலும் வர மறுக்கிறது, உணவுகளை யாரேனும் கொடுத்தால் அவர்களைக் கண்டு அச்சப்படுகிறது ” எனத் தெரிவித்தார்.

இந்த நாயின் நிலையைப் பார்த்து சாலையில் செல்லும் மக்கள் உணவு அளித்தால், புதியவர்களைப் பார்த்து நாய் அச்சப்பட்டுச் செல்ல மறுக்கிறது. துரத்திவிட்டாலும் சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் அதே இடத்துக்கு வந்துவிடுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், நாயின் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து மக்கள் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பார்த்த தொண்டு நிறுவனம் ஒன்று நாயை மீட்டு காப்பகத்தில் விட முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஆனால், தனது உரிமையாளர் இறந்தது குறித்து அறியாத அந்த நாய், மீண்டும் அவர் வருவார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதே இடத்தில் இரவு,பகலாகக் காத்திருப்பது பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.

இன்றுள்ள பரபரப்பான உலகில் ஒருவர் இறந்தவுடன் அடுத்த 3 நாட்களில் காரியங்களை முடித்துவிட்டு அடுத்த வேலைக்காகச் சொந்த பந்தங்களும், மனைவி, பிள்ளைகளும் சென்று விடுகின்றனர். ஆனால், இன்றளவும் தன்னை வளர்த்த எஜமானார் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நாய் காத்திருக்கிறது.

இந்த நாயின் செயல்பாடு ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற ஹச்சிகோ நாயின் செயல்பாட்டுக்கு ஒப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 1925-ம் ஆண்டு ஹச்சிகோ என்ற பெயர் கொண்ட அகிடா வகை நாய் இறந்துபோன தனது உரிமையாளர் ரயிலில் வருவார் என்று எண்ணித் தொடர்ந்து 9 ஆண்டுகள் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.

 நாய் இறந்தபின், நாயின் நினைவாக ஷிபுயா ரயில் நிலையம் முன், ஹச்சிகோ நாய்க்காகச் சிலை அமைக்கப்பட்டு இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x