Published : 01 Aug 2018 08:20 AM
Last Updated : 01 Aug 2018 08:20 AM

உலக மசாலா: அதிசய நட்பு!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினோ ஃபாசோ நாட்டில் இருக்கிறது பாஸோல் கிராமம். இங்கே மோசிஸ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் முதலைகளுடன் மிகவும் நெருங்கிப் பழகுகிறார்கள். இந்தக் கிராமத்தில் உள்ள குளத்தில் சுமார் 150 முதலைகள் வசிக்கின்றன. குளத்தில் அமர்ந்து பெண்கள் துணி துவைக்கிறார்கள். குளத்துக்கு அருகில் இருக்கும் நிலத்தில் ஆடுகளை மேய்க்கிறார்கள். குழந்தைகள் குளக்கரைகளில் விளையாடுகிறார்கள். இவர்களுக்கு அருகிலேயே முதலைகள் ஓய்வெடுக்கின்றன. சிலர் முதலைகளுக்கு அருகிலோ அல்லது அதன் மீதோ அமர்ந்து அரட்டையடிக்கிறார்கள். மனிதர்களுக்கும் முதலைகளைக் கண்டு பயமில்லை. முதலைகளுக்கும் மனிதர்களைக் கண்டு பயமில்லை. 15-ம் நூற்றாண்டில் இந்தக் கிராமத்தில் மழையே இல்லை. எங்கும் வறட்சி நிலவியது. மக்கள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, சில முதலைகள் இந்தக் குளத்தை மக்களுக்கு அடையாளம் காட்டின. அப்போதுதான் இப்படி ஒரு குளம் இருப்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அன்று முதல் முதலைகள் மீது மக்கள் மிகவும் அன்பும் அக்கறையும் காட்டி வருகின்றனர். முதலைகளுக்கு அவ்வப்போது கோழி, இறைச்சி போன்றவற்றையும் வழங்குகிறார்கள். முதலை இறந்து போனால், இறுதிச் சடங்குகளை நடத்தி, புதைக்கவும் செய்கிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை முதலைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு திருவிழாவையும் நடத்துகிறார்கள்.

“இந்த முதலைகளால்தான் நாங்கள் பாதுகாப்பாக இருக் கிறோம். அதற்காகவே இந்த அன்பைக் காட்டுகிறோம். எனக்கு 70 வயதாகிறது. இந்த 70 ஆண்டுகளில் முதலை கடித்தோ, தாக்கியோ ஒரு சம்பவம் கூட நடந்ததில்லை. ஆபத்து அறியாமல் அருகில் சென்று விளையாடும் குழந்தைகளைக் கூட முதலைகள் பொம்மை போலப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. எங்கள் முன்னோர்களுக்கு இவை தீங்கு இழைக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்ததாக ஒரு செவி வழி கதை இருக்கிறது. அது உண்மை என்பதுபோலதான் இவையும் எங்களிடம் நடந்துகொள்கின்றன” என்கிறார் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.

மனிதர்களும் முதலைகளும் நெருங்கிப் பழகும் இந்தக் கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்தனர். அவர்கள் முதலைக்கு உணவளிக்கலாம், முதலை மீது உட்கார்ந்து படம் எடுத்துக்கொள்ளலாம். கிராமத்தினரே முதலை களுக்கான கோழி, இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்கிறார்கள். அவற்றை ஒரு குச்சியில் கட்டி, முதலைகளுக்குக் கொடுக்கலாம். அருகில் பயிற்சியாளர்கள் இருப்பார்கள். சாப்பிட்டு ஓய்வெடுக்கும் முதலைகள் மீது அமர்ந்து படம் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் இந்தக் கிராமத்து மக்களுக்கு வருமானத்துக்கும் வழி ஏற்பட்டது. ஆனால் சமீப ஆண்டுகளாக மழை இல்லாமல் போய்விட்டது. குளத்து நீரும் ஆண்டுக்கு ஆண்டு வற்றிக்கொண்டே செல்கிறது. வறட்சியைக் கேள்விப்படும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதைத் தவிர்த்துவிடுகின்றனர். வருமானமும் குறைந்துவிட்டது. முதலைகளும் மக்களும் எதிர்காலம் குறித்து அச்சத்தில் இருக்கின்றனர். ஆரம்பக் காலத்தில் முதலைகள் புதுக் குளத்தை அடையாளம் காட்டியதுபோல, இப்போதும் காட்டும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் இந்தக் கிராமத்து மக்கள்.

இந்த அதிசய நட்பு தொடரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x