Published : 25 Jul 2018 07:58 AM
Last Updated : 25 Jul 2018 07:58 AM

உலக மசாலா: உத்வேகம் அளிக்கும் 80 வயது இளைஞர்!

60 வயதானாலே முதுகு வலி, மூட்டு வலி வந்துவிடுகிறது. ஆனால் ஜப்பானைச் சேர்ந்த 81 வயது டோஷிசுகே கனஸாவா, பாடி பில்டராக இருக்கிறார்! 20 வயது இளைஞர் செய்யும் அத்தனை செயல்களையும் எளிதாகச் செய்து விடுகிறார். இளைஞராக இருந்தபோது பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை அள்ளியிருக்கிறார். 34 வயதில் ஓய்வு எடுத்துக்கொண்டார். பிறகு உடற்பயிற்சி செய்வதைக் கைவிட்டார். மது அருந்தினார். புகைப் பிடித்தார். விரும்பியதை எல்லாம் சாப்பிட்டார். உடல்நிலை மோசமானது. 50-வது வயதில் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் பாடி பில்டராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஜிம்முக்குச் சென்றார். உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டார். மது, புகைப் பழக்கங்களை விட்டுவிட்டார். மெதுவாக அவரது உடல் மாற்றம் கண்டது. நோய்களும் காணாமல் போயின. இளைஞராக இருந்தபோது தினமும் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்தவர், 3 நேரம் மட்டுமே உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2016-ம் ஆண்டு, 80 வயதில் உலக பாடி பில்டர் போட்டியில் 6-ம் இடத்தைப் பிடித்தார். வயதான போட்டியாளர் என்ற தங்கப் பதக்கத்தையும் பெற்றார். "85 வயது வரை  என் உடல் ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். அதுவரை பாடி பில்டராக இருப்பேன்” என்கிறார் டோஷிசுகே கனஸாவா.  

உத்வேகம் அளிக்கும் 80 வயது இளைஞர்!

அமெரிக்காவின் பீட்டிள்ஸ் இசை மன்னர் ஜான் லெனன். உலகம் முழுவதும் பீட்டிள்ஸ் இசைக்கு ரசிகர்கள் இருந்தனர். இசையை மனித நேயத்துக்கும் அமைதிக்கும் பயன்படுத்தியவர். ‘அமைதிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்’ என்ற அவரது பாடல் இன்றளவும் அமைதிக்கான போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1980-ம் ஆண்டு மார்க் டேவிட் சாப்மென் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஜான் லெனன். இதற்கு சாப்மென் சொன்ன காரணம், அவர் இறை மறுப்பாளராக, கம்யூனிஸ்ட்டாக இருந்தார் என்பதுதான். 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கப்பட்டது. கடந்த 2000-வது ஆண்டிலிருந்து 2 ஆண்டுக்கு ஒருமுறை பரோல் கேட்டாலும் அதை நீதிமன்றம் நிராகரித்து வருகிறது. ஒவ்வொரு முறை பரோல் கேட்கும்போதும் ஜான் லெனனின் மனைவி யோகோ ஓனோ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இவர் வெளியே வந்தால், தனக்கும் தன் மகனுக்கும் பாதுகாப்பு இருக்காது என்றார். “ஜான் லெனனின் கருத்துகளும் அவரது புகழும் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த மோசமான முடிவை எடுத்தேன். ஆனால் 38 ஆண்டுகளுக்குப் பிறகும் பீட்டிள்ஸ் இசை ரசிகர்களிடமிருந்து எனக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்களை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறேன் என்பது இப்போதுதான் புரிகிறது. அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் சாப்மென். “மன்னிக்கக் கடினமாக இருக்கிறது. ஆனால் மன்னிப்பைவிட வேறு நல்ல விஷயம் இருக்க முடியாது” என்று கடந்த வாரம் தெரிவித்திருக்கிறார் யோகோ ஓனோ.

பீட்டிள்ஸ் இசை ரசிகர்கள் மன்னிப்பார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x