Published : 30 Jun 2018 09:30 AM
Last Updated : 30 Jun 2018 09:30 AM

உலக மசாலா: உலகின் மிக உயரமான சிறுவன்

சீ

னாவின் சிச்சுவான் மாகாணத்தில் லேஷான் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறான் ரேன் கேயூ. 11 வயதிலேயே 2.06 மீட்டர் (6 அடி) உயரம் இருக்கிறான்! பூமியிலேயே இந்த வயதில் இவ்வளவு உயரம் இருக்கக்கூடிய ஒரே சிறுவன் இவன்தான். “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வயது குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். அதனால் சிலர் என்னுடன் விளையாடத் தயங்குவார்கள். பள்ளியிலும் வயது அதிகமானவன் என்று கருதி புது ஆசிரியர்கள் என் வகுப்புக்குப் போகச் சொல்வார்கள். பள்ளி நாற்காலியில் அமர முடியவில்லை. அதனால் பெரிய நாற்காலி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்னுடன் படிக்கும் சக மாணவர்கள், என் இடுப்பு உயரமே இருக்கிறார்கள். மனதளவில் நான் அவர்கள் அளவுக்கு இருந்தாலும் உயரத்தால் அவர்களை விட்டு விலகியிருப்பதாகத் தோன்றுகிறது. சாலைகளில் நடக்கும்போது எல்லோரும் என்னை அதிசயமாகப் பார்ப்பார்கள். ஆனாலும் இந்த உயரம்தான் கின்னஸ் சாதனை புத்தகத்தில் என்னை இடம்பெற வைத்திருக்கிறது” என்கிறான் ரேன் கேயூ. “அளவுக்கு அதிகமான உயரத்தால் பயந்துபோய், பல பரிசோதனைகளை மேற்கொண்டோம். ஹார்மோன், பிட்யூட்டரி சுரப்பியில் எதுவும் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டனர்” என்கிறார் ரேனின் அம்மா.

உலகின் மிக உயரமான சிறுவனுக்கு ஒரு பூங்கொத்து!

பி

ரான்ஸ் நாட்டில் இருக்கும் இறைச்சிக் கடைக்காரர்கள், வீகன் (விலங்குகளின் பால் உட்பட எதையும் சாப்பிடாதவர்கள்) செயற்பாட்டாளர்களால் தங்களுக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். “சமீப காலமாக வீகன் செயற்பாட்டாளர்கள் மிக மோசமான வழிகளில் இறைச்சி உண்பதற்கு எதிர்ப்புக் காட்டி வருகிறார்கள். கடைக் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். மோசமான உணவு என்றும் இறைச்சி விற்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் பெயிண்ட்டால் எழுதி வைக்கிறார்கள். பொது மக்களும் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அடுத்தவர் உணவுப் பழக்கத்தில் தலையிடாமல் இருப்பதுதான் நியாயமானது. நாங்கள் வீகன் உணவுக்கார்களை இறைச்சி உண்ணும்படிச் சொல்லவில்லை. அதேபோல இறைச்சி சாப்பிடுபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் அவர்கள் மதிக்க வேண்டும். பிரான்ஸில் மட்டும் 18 ஆயிரம் இறைச்சிக் கடைக்காரர்கள் இருக்கிறோம். எங்களுக்கும் கடைகளுக்கும் பாதுகாப்பு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுள்ளோம்” என்கிறார் ஓர் இறைச்சிக் கடைக்காரர். “பிரான்ஸ் பன்முகத்தன்மை கொண்ட நாடு. இங்கே வீகன் உணவுக்காரர்கள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் காவல் போடுவது சாத்தியம் இல்லை. எல்லாவற்றையும் விசாரித்த பிறகு நடவடிக்கை எடுப்போம். மிகக் குறைந்த அளவில் இருப்பவர்கள் பெரும்பான்மையான மக்களை அச்சுறுத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்” என்கிறது உள்துறை அமைச்சகம்.

இதெல்லாம் ரொம்ப அநியாயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x