Last Updated : 23 May, 2018 04:56 PM

 

Published : 23 May 2018 04:56 PM
Last Updated : 23 May 2018 04:56 PM

கேரளாவில் ‘நிபா வைரஸால்’ இறந்த நர்ஸ் குழந்தைகளுக்கு அபுதாபியில் இருந்து குவிகிறது உதவி

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்த செவிலியர் லினி மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் இரு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

கேரளாவில் வவ்வால்கள் மூலம் நிபா எனும் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையின் பிரத்யேக அறையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முறையான பாதுகாப்பு முறைகள் இன்றி சிகிச்சை அளித்தால் மற்றவர்களுக்கும் பரவி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது நிபா வரைஸ்.

கோழிக்கோடு மருத்துவமனையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் 28வயதான லினி புதுச்சேரி என்ற நர்ஸ் ஈடுபட்டு இருந்தார். அவருக்கும் நிபா வைரஸ் தாக்கி, கடந்த இரு நாட்களுக்கு முன் பரிதாபமாக உயிரிழந்தார். லினிக்கு 2 வயதிலும், 7வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். லினியின் கணவர் பஹ்ரைனில் வசித்து வருகிறார். லனி இறக்கும் முன் தனது கணவருக்கு எழுதிய கடிதம் சமூக ஊடகங்களிலும், கேரள மாநிலத்திலும்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நிபா வைரஸ்க்கு பலியான செவிலியர் லினி புதுசேரியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், அரசுப்பணி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்தது இருந்தது.

இந்நிலையில், அபுதாபியில் உள்ள இரு நிறுவனங்கள் லினியின் இரு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்துள்ளன.

கேரளாவில் உள்ள பாலக்காட்டில் உள்ள அவிதிஸ் மெடிக்கல் சயின்ஸ் அமைப்பின் இயக்குநர்கள் சாந்தி பிரோமத், ஜோதி பாலட் ஆகியோர் லினியின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த இயக்குநர்கள் இருவரும் தற்போது அபுதாவியில் வசித்துவருகின்றனர்.

இது குறித்து சாந்தி பிரோமத் கூறுகையில், செவிலியர் லினி போற்றத்தகுந்த நர்ஸ் சேவையில் இருந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது தனது உயிரை இழந்துள்ளார். அவரின் கடமை உணர்வுக்கு எங்களால் முடிந்த சிறிய உதவி அவரின் இருகுழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதுதான். லினியின் குழந்தைகளின் கல்விச்செலவுமுழுவதையும் ஏற்பதாக அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டேன்.

நாங்கள் மருத்துவத்துறையில் இருப்பதால், உயிர்த்தியாகம், செவிலியர் பணி, அதன் மகத்துவத்தை அறிந்திருக்கிறோம். நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் நிகழ்வின்போது வைரஸ் தாக்கி இறப்பது என்பது கொடுமையானது எனத் தெரிவித்தார்.

செவிலியர் லிமா புதுசேரியின் சகோதரர் ஜெயக்குமார் வெலோம் கூறுகையில், வளைகுடா நாடுகளில் நர்ஸ் பணியாற்ற விருப்பம் தெரிவித்து அவருக்காக வேலை தேடினேன். லிமா அவரின் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், வயதான தாய்க்காகவும் வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், கடைசிவரை அவருக்கு வேலைக் கிடைக்கவில்லை. இப்போது அவரின் குழந்தைகளின் கல்விச்செலவை நிறுவனம் ஏற்க முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x