Published : 31 May 2018 08:38 AM
Last Updated : 31 May 2018 08:38 AM

உலக மசாலா: குழந்தை பெற்றே பிரபலமான குடும்பம்!

ங்கிலாந்தின் மிகப் பெரிய குடும்பத்தில் இன்னொரு குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். 43 வயது சூ ராட்ஃபோர்டும் 47 வயது ராட்ஃபோர்டும் யூடியூப் சானலில் தங்களின் 21-வது குழந்தை பிறக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள். குழந்தை பெற்றே பிரபலமானது இவர்கள் குடும்பம். “கடந்த செப்டம்பர் மாதம் எங்களுக்கு 20-வது குழந்தையாக ஒரு மகன் பிறந்தான். இனி குழந்தை பெறப் போவதில்லை என்று முடிவெடுத்தோம். ஆனால் மீண்டும் கருவுற்றிருக்கிறேன். இந்த முறை பெண் பிறக்க இருக்கிறாள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏற்கெனவே எங்களுக்கு 11 மகன்களும் 9 மகள்களும் இருக்கிறார்கள். இதுவரை திட்டமிட்டே குழந்தைகளைப் பெற்றுக் கொண்டோம். இதுதான் திட்டமிடாத குழந்தை. முதலில் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது மகிழ்ச்சியாக மாறிவிட்டது. 14 வயதில் எனக்கு முதல் குழந்தை பிறந்தது. 29 வருடங்களில் 20 குழந்தைகளைப் பெற்றிருக்கிறோம். இத்தனை குழந்தைகளையும் வளர்ப்பது கடினம்தான். ஆனாலும் இதை மகிழ்ச்சியாகவே நானும் ராட்ஃபோர்டும் செய்கிறோம்” என்கிறார் சூ.

“என்னுடைய ஆண்டு வருமானம் 45 லட்சம் ரூபாய்தான். இவ்வளவு பெரிய குடும்பத்தை நடத்துவதற்கு இயலாது. வாரத்துக்கு 27 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அரசாங்கம் குழந்தைகள் பராமரிப்புக்காக வாரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. அதனால் சமாளிக்கிறோம். மாதத்துக்கு 2 பேருக்குப் பிறந்த நாள் வந்து விடுகிறது. அதுக்கும் கிறிஸ்துமஸுக்கும் அதிகம் செலவாகும். மினி பஸ்ஸில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுபோய் ஆரம்பப் பள்ளியில் விடுவேன். அடுத்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்களை அழைத்துச் செல்வேன். ஒரு நாளைக்கு 18 பாட்டில் பால், 3 லிட்டர் ஜூஸ், 3 பாக்கெட் செரியல் தேவைப்படுகிறது. இவை தவிர வளர்ந்தவர்களுக்கான உணவுகள் தனி. இங்கிலாந்திலேயே எங்கள் வீட்டில்தான் ஒருநாள் உணவுக்கு அதிகமாகச் செலவாகிறது. ஒவ்வொரு வேளை உணவையும் இரு விதமாகச் செய்வோம். வேலை இருந்துகொண்டே இருக்கும். குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதிகாலை எழுந்தால் இரவு 10 மணி வரை வேலை இருந்துகொண்டே இருக்கும். பகலில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மனைவிக்கு உதவுவது என்று நேரம் சரியாக இருக்கும். இரவில் வேலைக்குச் சென்றுவிடுவேன். ஆனாலும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா சென்று வருவோம். குழந்தைகளுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. 9-வது குழந்தை பிறந்த போது குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முயன்றேன். என் மனைவிக்கு அதில் விருப்பமில்லை. 21-வது குழந்தையுடன் போதும் என்று கூறிவிட்டார். இனி எங்கள் குடும்பம் பெரிதாக வாய்ப்பில்லை. எங்கள் இரண்டாவது மகள் சோபிக்கு 3 குழந்தைகள். சோபியின் தங்கை, தம்பிகள் எங்கள் பேரன் பேத்திகளைவிட இளையவர்கள்” என்கிறார் ராட்ஃபோர்ட்.

குழந்தை பெற்றே பிரபலமான குடும்பம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x