Published : 10 Feb 2018 07:50 AM
Last Updated : 10 Feb 2018 07:50 AM

ஆளும் கட்சியின் கொலை மிரட்டலால் மாலத்தீவில் எதிர்க்கட்சி ஆதரவு ‘டிவி’ மூடல்

மாலத்தீவில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாலத்தீவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 அரசியல் கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ஏற்க அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்துவிட்டார். அத்துடன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் ரத்து செய்தனர்.

இதையடுத்து மாலத்தீவில் 15 நாட்களுக்கு எமர்ஜென்சியையும் அதிபர் யாமீன் பிரகடனப்படுத்தினார். அதிபரின் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பல பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு ராணுவத்தை அனுப்பி அரசியல் தீர்வு காண உதவ வேண்டும் என்று இந்தியாவுக்கு முன்னாள் அதிபர் முகமது நசீத் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செய்திகளை ஒளிபரப்பி வந்த ‘ராஜீ’ தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனது ஒளிபரப்பை நிறுத்திவிட்டது. இதுகுறித்து இந்நிறுவனம் கூறுகையில், ‘‘மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்த செய்திகள், படங்கள் ஒளிபரப்பியதால் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. அதனால் ஒளிபரப்பை நிறுத்தி விட்டோம்’’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி எம்.பி. இவா அப்துல்லா கூறும்போது, ‘‘ஆளும் கட்சி எம்.பி.க்களும் நிர்வாகிகளும் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்துள்ளனர்’’ என்று குற்றம் சாட்டினார்.

மாலத்தீவில் பதற்றம் அதிகரித்துள்ளதால், எமர்ஜென்சியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அதிபர் யாமீனை, ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். ஐ.நா. மனித உரிமை பிரிவு தலைவர் ஜைத் ராத் அல் உசைன் கூறும்போது, ‘‘அதிபர் யாமீனின் நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தாக்குதலாகும்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், அதிபர் யாமீன் எமர்ஜென்சியை விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டார்.

மேலும், பேச்சுவார்த்தை நடத்த மாலத்தீவு வந்துள்ள ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரிட்டன் தூதர்களையும் அதிபர் யாமீன் சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் மாலத்தீவில் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் குழப்பமும் நீடிக்கிறது.- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x