Published : 05 Jan 2018 09:53 AM
Last Updated : 05 Jan 2018 09:53 AM

இந்த ஆட்டம் யாருக்காக…?

“எ

ன்னுடைய மேசை மேலேயேதான் இருக்கிறது அந்தப் பொத்தான்; நான் அதை எப்போது வேண்டுமானாலும் அழுத்துவேன்… எச்சரிக்கை.”

“அப்படியா…? என்னுடைய பொத்தான், உன்னுடையதை விடப் பெரியது; நன்றாக வேலை செய்யக் கூடியதும் கூட…”

மன்னிக்கவும். இந்த அநாகரிக உரையாடலின் ஒரு வார்த்தைகூட நம்முடையது அல்ல. “என்ன இது…. நமது அரசியல் இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் விட்டதே…!” என்று அங்கலாய்க்கும் அனைவருக்கும் இந்த உரையாடல் சமர்ப்பணம்.

மேற்சொன்ன பேச்சுகளை உதிர்த்தவர்கள் யார்…? முதலாமவர் – வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்; பதில் கூறியவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

உலக அரசியல், ‘வரலாறு காணாத’ வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாக, பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பேரழிவு ஆயுதங்களைக் குவித்தல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை, அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளுதல்… என்று வட கொரியா, தொடர்ந்து உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அத்தனை அராஜகச் செயல்களிலும் விடாது ஈடுபட்டு வருகிறது.

இந்த நாட்டின் நேரடி எதிரி – அமெரிக்கா. மறைமுக நண்பன் –சீனா. புரிந்து இருக்குமே…?

அமெரிக்கா – சீனா சண்டையின் முகமூடி – வட கொரியாவின் கிம் ஜாங் உன்; மூவரும் முன் நிறுத்துவது – அணு ஆயுதத் தாக்குதல்.

இவர்களின் சண்டை, அணு ஆயுதத் தாக்குதலுக்கு இட்டுச் செல்லுமா…? சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. இதுதான் நல்ல செய்தி. இதன் இலவச இணைப்பாக மற்றொரு செய்தி – ஆணு ஆயுதத் தாக்குதல் சாத்தியத்தை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது.

மூளை பிசகியவன் எப்படி நடந்து கொள்வான் என்று யாரால் ‘தீர்மானமாக’ கணித்துச் சொல்ல முடியும்…? நினைவில் கொள்வோம் - எந்தத் தீர்மானத்தையும் தோல்வியுறச் செய்கிற வல்லமை உள்ளவர்கள் ஆடுகிற ஆட்டம் இது. கூடுதலாக ஒரு, ‘போனஸ்’ அம்சம் – மூன்று நாட்டு அதிபர்களும், அச்சில் வார்த்தாற் போல், ஒரே மாதிரியான குணாம்சங்கள் கொண்டவர்கள் – “நான் ஒருமுறை முடிவெடுத்துட்டா, என் பேச்சை நானே கேட்க மாட் டேன்..” ரகம்!

இப்படி ஆளாளுக்கு அச்சுறுத்துகிற நிலை ஏற்படலாம் என்பதனால்தான், அணு ஆயுதத் தயாரிப்பே கூடாது; இது மனித இனத்துக்கே பேரழிவாக மாறி விடுகிற ஆபத்தாக முடிந்துவிடும்’ என்று, அறுபது ஆண்டுகளுக்கு முன்பே உரக்கக் குரல் கொடுத்தார் ஒரு தலைவர்.

நம்ப முடிகிறதா…? அணு ஆயுதத்துக்கு எதிராக முழங்கியவர், அதற்கு எதிராக, தனி மனிதனாய் உலகத் தலைவர்களிடம் வாதிட்டவர் – ஓர் இந்தியர்; ஒரு தமிழர். மூதறிஞர் ராஜாஜி!

அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி, சோவியத் யூனியன் அதிபர் நிகிதா குருஷேவ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து முறையிட்டார். ‘மது கூடாது’ என்று உள்ளூரில் கெஞ்சிப் பார்த்தார்; ஊஹூம்… கேட்பதாய் இல்லை; 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, தமிழகத்தில் மது எதிர்ப் புக் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

இதே நிலைதான் அணு ஆயுத எதிர்ப்பு விஷயத்திலும் நடந்தது. “ராஜாஜியின் வாதத் திறமை என்னை பிரமிக்க வைக்கிறது; அவர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது விஷயத்தில் நான் எதுவும் செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்று கையை விரித்து விட்டார் ரஷ்ய அதிபர். அமெரிக்க அதிபரும் இதையேதான் சொன்னார்!

60 ஆண்டுகள் ஓடிவிட்டன. வட கொரியா என்கிற சிறிய நாடு, ‘ஒழித்து விடுவேன்’ என்று ‘உதார்’ விட்டுக் கொண்டு இருக்கிறது. “நான் யார் தெரியுமா?” என்று பேட்டை ‘வஸ்தாது’ தொனியில் அமெரிக்காவும் பதிலடி கொடுக்கிறது. யாருக்காக யார் ஆடுகிற ஆட்டம் இது…?

(நாளையும் வரும்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x