Published : 14 Oct 2023 05:28 PM
Last Updated : 14 Oct 2023 05:28 PM

இஸ்ரேல் - ஹமாஸ் போர் | பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அமெரிக்கா, சவுதி அரேபியா வலியுறுத்தல்

காசா நகர மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனிய நோயாளிகள்

ரியாத்: ‘பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று தன்னைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனிடம் சவுதி அரேபிய இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கருத்தை ஆன்டனி பிளிங்கனும் ஆமோதித்துள்ளார்.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய தரைக்கடல் பகுதிக்கு தனது போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியது. மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு வருகை தந்து அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்து நேரில் ஆதரவை தெரிவித்தார். அதோடு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைவிட ஹமாஸ் மிக மோசமானது என்றும் அவர் விமர்சித்தார். இதையடுத்து, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோட் ஆஸ்டின் நேற்று பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்து அந்நாட்டுக்குத் தேவைப்படும் ராணுவ உதவிகள் குறித்து நேரில் கேட்டறிந்தார்.

இஸ்ரேல் பிரதமருடனான சந்திப்பை அடுத்து பாலஸ்தீன பிரதமர் மஹ்முத் அப்பாஸ் மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா II-வைச் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியாவுக்கு வருகை தந்த ஆன்டனி பிளிங்கன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும், இளவரசருமான ஃபைசல் பின் ஃபர்ஹானைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஃபைசல் பின் ஃபர்ஹான், ‘இந்த பிராந்தியத்துக்கு கடினமான நேரம் இது. ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இது மிக முக்கியமான வாய்ப்பு. நிலைமை மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள்தான். இரு தரப்பைச் சேர்ந்த பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் எந்த வடிவில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஆன்டனி பிளிங்கன், ‘இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஹமாஸ் நடத்திய இந்தத் தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை பொறுத்துக்கொள்ளுமாறு எந்த ஒரு நாடும் இஸ்ரேலை கேட்க முடியாது. இந்தத் தாக்குதலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக ஹமாஸ் இல்லை. அவர்களின் எதிர்கால நலன் குறித்து அதற்கு அக்கறை இல்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. இஸ்ரேலை ஒழிக்க வேண்டும்; யூதர்களைக் கொல்ல வேண்டும் என்பதே அதன் நோக்கம். இதை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கிறது. ஹமாஸ் விஷயத்தில் கூடுதல் தெளிவு ஏற்பட வேண்டிய நேரம் இது’ என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஃபைசல் பின் ஃபர்ஹான், ‘இரு தரப்புக்கும் இடையே நடக்கும் சண்டை விரைவாக முடிவுக்கு வர தேவையான வழிகளை நாம் ஆராய வேண்டும். குறைந்தபட்சம் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு, மனிதாபிமானத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கான காரணத்துக்கு தீர்வு காண வேண்டும். காசாவில் மனித உரிமை சார்ந்த அம்சங்கள் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதை வலியுறுத்த நான் விரும்புகிறேன். மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை நாம் இணைந்து உறுதிப்படுத்த வேண்டும். வன்முறை மாறி மாறி ஏற்படுவதைத் தடுக்க ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என வலியுறுத்தினார்.

அப்போது பேசிய பிளிங்கன், ‘தனது மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மிக உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. மீண்டும் ஒருமுறை இதுபோன்ற தாக்குதல் நிகழாதவாறு தடுக்க வேண்டிய பொறுப்பும் அதற்கு உள்ளது. இரு தரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த நாம் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, காசா பகுதியில் பாதுகாப்பான இடங்களை உருவாக்க வேண்டும். அங்கு மனிதமாபிமான உதவிகளை வழங்க வேண்டும். இரு தரப்பிலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை யாருமே விரும்ப மாட்டார்கள். அவர்களை பாதுகாக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

அதேநேரத்தில், இந்த மோதல் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அமைதி, நிலையான தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்த அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. ஏமனும், சூடானும் கூட இதில் இணைந்துள்ளன’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு முக்கிய திருப்பமாக இஸ்ரேல் மீதான தாக்குதலை வழிநடத்திய ஹமாஸ் அமைப்பின் தலைவர் அலி காதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் அனைவருமே இதேபோன்று கொல்லப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x