Published : 10 Oct 2023 05:54 AM
Last Updated : 10 Oct 2023 05:54 AM

இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அழைத்துவர தயார்: வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை தகவல்

சென்னை: இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தால் உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் மீது பாலஸ்தீன நாட்டில் செயல்படும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன எல்லைப்பகுதியான காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு பணி மற்றும் கல்விக்காக தமிழர்கள் பலர் சென்று தங்கியுள்ளனர். அவர்களின் நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரிகள் அங்குள்ள தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்துவருகின்றனர்.இதுதவிர, தொடர்பு எண்களையும் வெளியிட் டுள்ளனர்.

இதன் அடிப்படையில் தற்போது பணிக்காக சென்று அங்கு தங்கியுள்ள 32 பேர், துறையை தொடர்பு கொண்டு தங்களின் இருப்பிடம் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளிநாடு வாழ் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இஸ்ரேலில் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்த 20 பேரில் 7 தமிழர்கள். இவர்கள் எங்களை தொடர்பு கொண்டு தங்களின் இருப்பிடம் மற்றும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.அவர்களே மீதமுள்ள 23 பேரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை அளித்துள்ளனர். மேலும் 2 தமிழர்கள் அங்கிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பெயர் விவரங்கள் பெற முயற்சி செய்து வருகிறோம்.அவர்கள் வேலைக்காக அங்கு சென்றுள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில்,தேவையான உதவிகளை செய்ய அங்குள்ள இந்திய தூதரகம் வாயிலாக ஏற்பாடு செய்து வருகிறோம்.அவர்கள் இதுவரை எங்களை அழைத்துச்செல்லுங்கள் என்று கூறவில்லை.

தாக்குதல் என்பது காசாவில் நடைபெற்று வரும்நிலையில், இவர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். இருந்தாலும் அவர்கள் விரும்பினால் எகிப்து அல்லது வேறு நாடுகள் வழியாக அவர்களை உடனே அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்நிலையில் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் தன்னைபற்றிய தகவல்களை தெரிவி்த்துள்ளார். அதிகாரிகள் அதனைக்கொண்டு அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். சுற்றுலா சென்றவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்க வில்லை.

அங்கு பணிக்காக சென்ற வர்கள், மாணவர்கள் குறித்த முழு விவரங்கள் தற்போதைக்கு இல்லை.அதற்காக ஒரு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.விரைவில் அதனை வெளியிட உள்ளோம்.அதில் வெளிநாட்டில் இருப்பவர்கள் பதிவு செய்தால் முழுமையான தரவுகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x