Published : 02 Dec 2017 09:56 AM
Last Updated : 02 Dec 2017 09:56 AM

கடந்த 200 ஆண்டுகளில் முதல்முறையாக: 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி விலகுகிறார் ஜப்பான் மன்னர்

‘‘வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்’’ என்று பிரதமர் ஷின்சோ அபே நேற்று அறிவித்தார்.

ஜப்பானில் மன்னர் குடும்பத்தினருக்கு மிகுந்த மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மன்னராக அகிஹிட்டோ (83) பதவி வகிக்கிறார். இவருடைய மனைவி ராணி மிச்சிகோ. இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்னருக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய முடியவில்லை. அதனால் பதவி விலக விரும்புகிறேன் என்று கடந்த ஆண்டே அகிஹிட்டோ அறிவித்தார். இதனால் ஜப்பான் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவார் என்று பிரதமர் ஷின்சோ அபே நேற்று அறிவித்தார். கடந்த 200 ஆண்டுகளில் ஜப்பான் மன்னர் குடும்பத்தில் இதுவரை யாரும் பதவி விலகியது இல்லை. முதல் முறையாக அகிஹிட்டோ பதவி விலகுகிறார். அதனால் மன்னர் பதவி விலகுவதற்கு வகை செய்யும் வகையில் ஜப்பான் அரசு புதிதாக தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பிறகு நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு, அவருடைய மூத்த மகன் நருஹிட்டோ (53) அடுத்த மன்னராக பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அகிஹிட்டோ பதவி விலகிய பிறகு மறுநாளே நருஹிட்டோ மன்னராக பதவியேற்க உள்ளார். இதுகுறித்து ஷின்சோ அபே நேற்று கூறும்போது, ‘‘மன்னர் பதவி விலகும் நிகழ்ச்சியையும் புதிய மன்னர் பதவியேற்கும் நிகழ்ச்சியையும் ஜப்பானில் கோலாகலமாகக் கொண்டாட அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்’’ என்று கூறினார். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x