Published : 28 Dec 2017 10:51 AM
Last Updated : 28 Dec 2017 10:51 AM

உலக மசாலா: நம்பிக்கையளிக்கும் மாற்று மருத்துவம்!

 

ங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் வசிக்கிறார் 9 வயது மோலி மெக்கின்லி. இந்த ஆண்டு கடுங்குளிர் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையிலும் மோலி பள்ளி செல்லும் வழியில் சாலைகளில் சிலர் அமர்ந்து, யாசகம் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். “இத்தனை ஆண்டுகள் வீடற்றவர்களைப் பார்த்தபோது எனக்கு எதுவும் தோன்றியதில்லை. ஆனால் இந்த ஆண்டு குளிரில் அவர்கள் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இந்த கிறிஸ்துமஸுக்கு அவர்களுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொடுக்கலாமா என்று என் அம்மாவிடம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். என்னுடைய பிறந்த நாளுக்கு செலவாகும் பணத்தையும் இதில் சேர்த்துவிட்டேன். சூடான சூப், சுவையான உணவு, ஷு, கோட், தொப்பி ஆகியவற்றை வாங்கிச் சென்று சிலரிடம் கொடுத்தேன். எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிறந்தநாள் கொண்டாடியிருந்தால் கூட நான் இவ்வளவு மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டேன். அவர்களில் மார்கரெட் நன்றாகப் பாடினார். ஒரு பாடகராக நினைத்தாராம். விவாகரத்து பெற்ற பிறகு சாலைகளில் வசித்து வருகிறார். என்னால் ஒரு சிலருக்குத்தான் அதுவும் சில வேளை உணவுதான் வழங்க முடியும். அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும்” என்கிறார் மோலி மெக்கின்லி.

சிறிய வயதில் பெரிய சிந்தனை!

ங்கிலாந்தில் வசிக்கும் 7 வயது கேலி லாவ், குணப்படுத்த இயலாத அரிய மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதை குணப்படுத்த இயலாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். “எங்கள் மகள் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் உறுதியாக சொல்லிவிட்டாலும் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வசதி இல்லாவிட்டாலும் நன்கொடை திரட்டியாவது உயிரைக் காப்பாற்ற முடிவெடுத்தோம். ஏனென்றால் தன் உயிரை எப்படியும் அப்பாவும் அம்மாவும் காப்பாற்றிவிடுவார்கள் என்று கேலி நம்பினாள். மெக்சிகோவில் மாற்று மருத்துவம் செய்ய முடிவு செய்தோம். எங்கள் பிரச்சினையைச் சொல்லி நன்கொடை சேகரித்தோம். விமானத்தில் அவ்வளவு நேரம் பயணிக்க கேலியின் உடல்நிலை ஒத்துழைக்காது என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினோம். மூளை முழுவதும் கட்டி பரவிவிட்டாலும் மருத்துவம் செய்து பார்க்கலாம் என்று நம்பிக்கை கொடுத்தார்கள். மாற்று மருத்துவத்தில் நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தோம். ஒரே வாரத்தில் மகள் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாள். மருத்துவர்களே அதிசயம் என்றார்கள். 3 மாத சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்து திரும்பினோம். 2018-ம் ஆண்டு வரை தொடர் சிகிச்சையளிக்க வேண்டும். அதற்கு 3 கோடி ரூபாய் வரை செலவாகும். எங்களால் இதுவரை 1.8 கோடிதான் நன்கொடை பெற முடிந்திருக்கிறது. 11-வது முறையாக சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறோம். இங்கிலாந்து வரலாற்றிலேயே மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிக காலம் வாழ்ந்துகொண்டிருப்பவள் கேலிதான் என்கிறார்கள் மருத்துவர்கள். என் மகள் முழுவதும் குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கை எங்களைப் போல் பலருக்கும் இப்போது வந்துவிட்டது” என்கிறார் கேலியின் அப்பா ஸ்காட்.

நம்பிக்கையளிக்கும் மாற்று மருத்துவம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x