Published : 30 Dec 2017 10:01 AM
Last Updated : 30 Dec 2017 10:01 AM

சீனாவுடனான வர்த்தகத்தை சீர்குலைக்க இந்தியா சதி: பாகிஸ்தான் அரசு குற்றச்சாட்டு

சீன, பாகிஸ்தான் நெடுஞ்சாலை பொருளாதார மண்டல திட்டத்தை சீர்குலைக்க இந்தியா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் உதயமானது. அப்போது பலுசிஸ்தானை ஆண்ட அகமது யர் கான் அந்தப் பகுதியை தனிநாடாக பிரகடனம் செய்தார். ஆனால் 1948 மார்ச் 27-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம், பலுசிஸ்தானை ஆக்கிரமித்தது. பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பரப்பளவில் பலுசிஸ்தான் 44 சதவீதத்தை கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அப்பகுதி மக்கள் 4 முறை மிகப்பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்களை பாகிஸ்தான் ராணுவம் அடக்கியது. இப்போதும் அங்கு அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகின்றன. இதன்காரணமாக பாகிஸ்தான் ராணுவத்தின் பெரும் பகுதி பலுசிஸ்தானில் குவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் பலுசிஸ்தானின் குவாதர் நகரில் சீன அரசு மிகப் பெரிய துறைமுகத்தை நிர்மாணித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை துறைமுகத்துடன் இணைக்க பிரமாண்ட நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ‘சீன, பாகிஸ்தான் நெடுஞ்சாலை பொருளாதார மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் ‘ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தின் ஆணிவேராக குவாதர் துறைமுகம் வர்ணிக்கப்படுகிறது.

துறைமுகம், நெடுஞ்சாலை திட்டத்துக்கு பலுசிஸ்தான் மக்கள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு சீனாவுக்கு தாரை வார்க்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நெடுஞ்சாலை காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதி வழியாகச் செல்வதால் இந்தியாவும் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசன் இக்பால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சீன, பாகிஸ்தான் நெடுஞ்சாலை பொருளாதார மண்டல திட்டத்தை சீர்குலைக்க இந்தியா சதி செய்து வருகிறது. இதற்கு ஆப்கானிஸ்தான் மண்ணை அந்த நாடு பயன்படுத்துகிறது. எனினும் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதனை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

பலூச் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது என்று பாகிஸ்தான் அமைச்சர் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து நாச வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியே இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x