Published : 30 Dec 2017 10:02 AM
Last Updated : 30 Dec 2017 10:02 AM

உலக மசாலா: இந்தக் காலத்திலும் இப்படியெல்லாமா நடக்கும்!

தாய்

லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அந்த மனிதரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டது. வாசலில் நிற்கும் அந்த மனிதரை, 7 மாதங்களுக்கு முன்பு இறந்து போனதாகக் கருதி, புதைத்தும் விட்டிருந்தார்கள். 44 வயது சாகோர்ன் சச்சீவா, இரண்டு ஆண்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீன்பிடிப்புத் தொழிலைச் செய்துவிட்டு வீடு திரும்பியிருந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தினருடன் எந்தவிதத் தொடர்பும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. அதனால் மகிழ்ச்சியாகத் தன் குடும்பம் வரவேற்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் பேயாகப் பார்ப்பார்கள் என்றும் நினைக்கவில்லை. பயத்தில் நின்றவர்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு பேச்சுக் கொடுத்தனர். கொஞ்சம் தைரியம் வந்தவுடன் தொட்டுப் பார்த்தனர். குடும்பத்தினரின் இந்த நடவடிக்கைகள் சகோர்னுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “நீண்ட நேரம் கழித்து, நான் இறந்துபோன கதையைச் சொன்னார்கள். 7 மாதங்களுக்கு முன்பு நாங் லோயங் காவலர்கள் எங்கள் குடும்பத்தைத் தொடர்புகொண்டு, நான் உடல் நலம் குன்றி இறந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஓர் உடலைக் காட்டி அடையாளம் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார்கள். அந்த உடல் கிட்டத்தட்ட என்னைப் போலவே இருந்ததால் நான்தான் என்று நினைத்து, இவர்களும் வாங்கிக்கொண்டனர். ஊருக்கு வந்து இறுதிக் காரியத்தையும் செய்துவிட்டனர். நான் நாட்டின் பல இடங்களுக்கும் வேலைக்காக அனுப்பப்பட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் வேலையை விட்டுவிட்டு, குடும்பத்தைப் பார்க்கக் கிளம்பினேன். இப்போது என் இறப்புச் சான்றிதழை மாற்றக் கோரி, அரசாங்க அலுவலகங்களுக்கு நடந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் சாகோர்ன்.

இந்தக் காலத்திலும் இப்படியெல்லாமா நடக்கும்!

சீனாவைச் சேர்ந்த ஸெங், 2005-ம் ஆண்டு அவரது உறவினர் ஒருவரை வாடகைத் தகராறில் கொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்றபோது, தப்பித்து வேறு ஒரு நகரத்துக்குச் சென்றுவிட்டார். அங்கே தன்னுடைய பெயரை வாங் கை என்று மாற்றிக்கொண்டு, வாய் பேச முடியாதவராகப் பிச்சை எடுத்தார். காவலர்கள் அவரைக் கண்டுபிடித்து விசாரித்தனர். தன்னால் பிறந்ததிலிருந்து வாய் பேச இயலாது என்றும் தான் இந்த ஊரைத் தவிர வேறு ஊருக்குச் சென்றது இல்லை என்றும் எழுதிக் காட்டினார். சில காலம் இவரைக் கண்காணித்த காவலர்கள், இவர் வேறு ஒருவர் என்ற முடிவுக்கு வந்தனர். அங்கிருந்து 700 கி.மீ. தூரத்தில் இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றார். வாய் பேச இயலாதவராகவே ஒரு கட்டிட நிறுவனத்தில் வேலை செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணை மணந்து, குழந்தையும் பெற்றுக்கொண்டார். நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தபோது, மீண்டும் அவரைத் தேடி காவலர்கள் வந்துவிட்டனர். ரத்த மாதிரியை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பினர். கொலை செய்த ஸெங்தான் இந்த வாங் என்பதைக் கண்டுபிடித்தனர். 12 ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்தவருக்கு, பேசும் திறனே இல்லாமல் போய்விட்டது. “பேசாமல் இருந்தால் தப்பிவிடலாம் என்று நினைத்தேன். கடைசியில் பேசும் சக்தியை இழந்துவிட்டேன்” என்று எழுதிக் காட்டி, தன் குற்றத்தையும் ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸெங்.

பயன்படுத்தாத எதுவும் அழிந்துபோகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x