Published : 07 Nov 2017 11:09 AM
Last Updated : 07 Nov 2017 11:09 AM

உலக மசாலா: ஓர் உயிரைக் காப்பாற்றிய பார்வையாளர்களுக்குப் பாராட்டுகள்!

ஷ்யாவின் கலினிங்க்ராட் உயிரியல் பூங்காவில், பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது பார்வையாளர்கள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆண் புலி இருக்கும் கூண்டின் கதவு தவறுதலாகத் திறந்திருந்ததை அந்தப் பெண் கவனிக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தது புலி. பயத்தில் கத்தினார். மேலே இருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கற்களை எடுத்து புலி மீது வீசினர். ஆனாலும் அந்தப் பெண்ணை விடுவதாக இல்லை புலி. அருகிலிருந்த உணவகத்திலிருந்து நாற்காலிகளை எடுத்துவந்து வீசினார்கள். புலியின் கவனம் திசை திரும்பியது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வேகமாக வெளியேறினார் அந்தப் பெண். சக பூங்கா ஊழியர்கள் இந்தச் சம்பவத்தின்போது அருகில் இல்லை. பார்வையாளர்களே ஆம்புலன்ஸை வரவழைத்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “இது மோசமான சம்பவம். இந்தப் பூங்கா ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. யாரோ புலியின் கூண்டைத் திறந்து, பூட்ட மறந்துவிட்டனர். அந்தப் பெண் மிக மோசமாகப் புலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. குணம் பெற நீண்ட காலம் ஆகும். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் புலிக்கு 16 வயதாகிவிட்டது. அன்று நல்ல மனநிலையில் புலி இல்லை என்று தெரியவந்திருக்கிறது” என்கிறார் பூங்காவின் செய்தித் தொடர்பாளர்.

ஓர் உயிரைக் காப்பாற்றிய பார்வையாளர்களுக்குப் பாராட்டுகள்!

தா

ய்லாந்தின் காவோ டின் என்ற கிராமத்தில் வசிக்கிறார் 24 வயது அருனீ ஜேயங்க்ரசங். இவரும் 26 வயது பூன்யாங் சவாட்டீயும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த அக்டோபர் 22 அன்று இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கு முதல் நாள் மாப்பிள்ளை குடும்பத்தினரும் மணமகள் குடும்பத்தினரும் சந்தித்து, சில சடங்குகளைச் செய்தனர். பிறகு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற மணமகன் குடும்பத்தினர், வரவே இல்லை. மணமகள் குழப்பமடைந்தார். மாப்பிள்ளை கிராமத்துக்குத் தேடிச் சென்றனர். அங்கே வீடு பூட்டப்பட்டிருந்தது. மணமகனை மொபைலில் அழைத்தபோது, அவர் நீண்ட நேரம் எடுக்கவில்லை. பிறகு திருமணத்தை காலை 9 மணிக்கு வைப்பதற்குப் பதில், மாலை 6 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என்றார். உறவினர்கள் காத்திருந்தனர். ஆனால் மாலையும் வரவில்லை. அதற்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. பிறகு சிலரை விசாரித்தபோதுதான், மாப்பிள்ளையின் குடும்பத்துக்கு மணமகள் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணை கொடுக்க முடியவில்லை என்று தெரியவந்தது. திருமணத்துக்கு நகைகளும் பணமுமாகச் சுமார் 4 லட்சம் ரூபாய் அளவுக்கு மணமகள் வீட்டார் கேட்டிருந்தனர். அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லாததால், ஊரை விட்டுச் சென்றுவிட்டனர். இறுதிவரை நம்பிக்கை அளித்து ஏமாற்றிவிட்டுச் சென்றதுக்கும் திருமண ஏற்பாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மணமகன் வீட்டார் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

வரதட்சணையால் முறிந்துவிட்டதே இந்த 6 வருடக் காதல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x