Published : 01 Nov 2017 09:50 AM
Last Updated : 01 Nov 2017 09:50 AM

விண்வெளிக்கு அருகில் 20 கி.மீ. உயரத்தில் ஆளில்லா உளவு விமானத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது சீனா

விண்வெளிக்கு அருகில் சுமார் 20 கி.மீ. உயரத்தில் உளவு தகவலை சேகரிப்பதற்காக, ஆளில்லா உளவு விமானத்தை சீனா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது.

இது தொடர்பாக சீன நாளிதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது:

கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ. உயரத்தில் விண்வெளி பகுதி தொடங்குகிறது. ‘மரண மண்டலம்’ என அழைக்கப்படும் இப்பகுதி உளவு பார்ப்பதற்கு பொருத்தமான இடமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதிக உயரத்தில் இருப்பதாலும் அங்கு காற்றழுத்தம் குறைவாக இருப்பதாலும் இப்பகுதியில் விமானங்களை இயக்குவது கடினம்.

மேலும் அங்கு வெப்பநிலை குறைவாக இருக்கும் என்பதால் பேட்டரிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எளிதில் பழுதடைய வாய்ப்பு உள்ளது. அதுபோல, இப்பகுதி விண்வெளிக்கு மிகவும் கீழே இப்பகுதி இருப்பதால் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவதும் கடினம். இதனால் இப்பகுதியில் உளவு பார்க்கும் பணி மிகவும் சவாலானதாகவே இருந்து வருகிறது.

எனினும், விண்வெளிக்கு அருகே உளவு சேகரிப்பதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா உளவு விமானத்தை விண்வெளிக்கு அருகே வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தது. ராணுவத்துக்கு உளவு தகவல்களை சேகரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.

கிரிக்கெட் மட்டை (பேட்) அளவுள்ள 2 விமானங்கள் எலக்ட்ரோமேக்னெடிக் பல்ஸ் உதவியுடன் ஏவப்பட்டன. பின்னர் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அவை வெற்றிகரமாக அடைந்தன.

இதன்மூலம் சீனாவின் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க கடற்படையும் நாசாவும் இதுபோன்ற சோதனையில் ஏற்கெனவே ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x