Published : 24 Nov 2017 09:48 AM
Last Updated : 24 Nov 2017 09:48 AM

பாக். நிதியமைச்சர் 3 மாதம் விடுமுறை

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், 3 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி அனுமதி அளித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ், அவரது குடும்பத்தினர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமானது. இந்த வழக்கில் நவாஸ் பதவி இழந்தார். இதேபோல் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இஷாக் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக இஷாக்கை பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் அறிவித்தது.

இதற்கிடையில் இருதய கோளாறுக்கு சிகிச்சை பெற இஷாக் லண்டன் வந்துவிட்டார். அதனால் நிதியமைச்சர் பொறுப்பைத் தற்காலிகமாக வகிக்க இயலாது. மருத்துவர்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். எனவே, 3 மாதங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸிக்கு இஷாக் தர் கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த பிரதமர், இஷாக் தர் 3 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கி 2 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவுகளை அமைச்சரவை செயலகம் நேற்று வெளியிட்டது. இதையடுத்து இஷாக் தர் விடுமுறையில் உள்ளதால் நிதித் துறையை தற்காலிகமாக பிரதமரே கவனித்துக் கொள்வார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சட்டதிட்டத்தின்படி பிப்ரவரி 21-ம் தேதிஅவர் மீண்டும் நிதியமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அப்படி பொறுப்பேற்காவிட்டால் நிதியமைச்சர் பதவி தானாகவே காலாவதியாகி விடும். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x