Published : 02 Nov 2017 09:30 AM
Last Updated : 02 Nov 2017 09:30 AM

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதல்: சரக்கு வாகனம் மோதி 8 பேர் கொலை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு தீவிரவாதி, நடைபாதையில் சென்றவர்கள் மீது திடீரென சரக்கு வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.

நியூயார்க்கில் மன்ஹேட்டன் பகுதி ஹுஸ்டன் சாலையில் நேற்று பிற்பகல் வெள்ளை நிற சரக்கு வாகனம் அதிவேகத்தில் தாறுமாறாக ஓடியது. பாதசாரிகள், சைக்கிள் பாதைக்குள் புகுந்த அந்த வாகனம் நடந்து சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியது. இதில் 8 பேர் பலியாகினர். அவர்களில் 5 பேர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் தாறுமாறாக ஓடிய வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அதில் இருந்து இறங்கிய மர்ம நபர், 2 கைகளிலும் போலி துப்பாக்கிகளை காட்டி மிரட்டினார். அங்கிருந்து அவர் தப்பியோட முயற்சித்தார். ஒரு போலீஸ்காரர், அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

உஸ்பெகிஸ்தான் அகதி

முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய நபர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா சாய்போவ் (29) என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் சைபுல்லோ அகதியாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார். ஒஹையோ, புளோரிடாவில் வசித்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் குடியேறியுள்ளார்.

தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராகவும், சரக்கு வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். சைபுல்லா ஓட்டிய வாகனத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி, ஆதரவு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று நியூயார்க் போலீஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சைபுல்லோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நியூயார்க்கின் மன்ஹேட்டன் பகுதியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வீடு உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பிரியங்கா நேற்று வெளியிட்ட பதிவில், படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். என் வீட்டுக்கு அருகில் தாக்குதல் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். நியூயார்க் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் ட்ரம்ப் கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மத்திய கிழக்கில் தோற்கடிக்கப்பட்ட ஐ.எஸ். அமைப்பு அமெரிக்காவில் நுழைய முடியாது. அமெரிக்காவின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x