Published : 28 Jul 2023 05:01 PM
Last Updated : 28 Jul 2023 05:01 PM

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியுள்ளது.

சமூக நலப் பாதுகாப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர். இதனால் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்புகளின் கடும் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறது

இந்த நிலையில், 2018-ல் சரிதேவி டிஜமானி என்ற பெண் 30 கிராம் ஹெராயினை கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு தூக்குத் தண்டனையை சிங்கப்பூர் அரசு உறுதி செய்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வார தொடக்கத்தில் 50 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக அசிஸ் என்ற இளைஞருக்கு சிங்கப்பூர் அரசு தூக்குத் தண்டனை நிறைவேற்றியது. இந்த நிலையில், இவ்வாரத்தில் இரண்டாவது நபராக சரிதேவி டிஜமானிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவியதாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கராஜு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மரண தண்டனையை உறுதி செய்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் நடந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுப்பையாவுக்கு வழக்கப்பட்ட மரணத் தண்டனை உலக முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துவோருக்கு மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x