Published : 01 Nov 2017 09:48 AM
Last Updated : 01 Nov 2017 09:48 AM

மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் கடலில் மூழ்கி பலி

வங்கதேச கடற்பகுதியில் நேரிட்ட இருவேறு சம்பவங்களில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் 7 பேர் கடலில் மூழ்கி இறந்தனர்.

மியான்மரின் ராக்கைன் மாநிலம், புத்திடாங் பகுதியில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் 50-க்கும் மேற்பட்டோர் மீன்பிடி படகு ஒன்றில் வங்கதேசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் காக்ஸ் பஜார் கடற்பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்தது. இதில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து, காக்ஸ் பஜார் துறைமுகப் பகுதி மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 37 அகதிகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றொரு சம்பவமாக, மியான்மர் அகதிகள் படகு ஒன்று காக்ஸ் பஜார் மாவட்ட கடற்கரையை நோக்கி நேற்று முன்தினம் வந்தது. இந்தப் படகு கரையை அடையும் தருவாயில், தாயின் பிடியில் இருந்து 3 குழந்தைகள் நீரில் தவறி விழுந்தன. 10 மாதம் முதல் 3 வயதுடைய இக்குழந்தைகளை தேடும் பணி நடந்தது. இதில் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று முன்தினமும் ஒரு குழந்தையின் உடல் நேற்று காலையும் மீட்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை சுமார் 200 ரோஹிங்கியா அகதிகள் விபத்தில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x