Published : 21 Nov 2017 09:52 AM
Last Updated : 21 Nov 2017 09:52 AM

உலக மசாலா: 30 வயதுக் குழந்தை

சீனாவில் வசிக்கும் வாங் டியான்ஃபாங் 4 வயது குழந்தையைப் போன்று தோற்றம் அளிக்கிறார். ஆனால் இவருக்கு 30 வயது. இவரால் பேச முடியாது, சில நிமிடங்களே எழுந்து நிற்க முடியும். 24 மணி நேரமும் கவனித்துக்கொள்கிறார் இவரது அம்மா. “இரண்டு வயதிலேயே என் மகனின் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் நின்றுவிட்டது. ஏராளமான மருத்துவர்களைப் பார்த்தோம். இன்றுவரை இவனுக்கு என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. மூன்று வயதில் இவனுக்காக நான் படும் சிரமங்களைப் பார்த்த குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் புத்தர் ஆலயத்தில் இவனை விட்டு விடும்படிச் சொன்னார்கள். இன்னொரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள். அவர்கள் சொன்னதை நான் மறுத்துவிட்டேன்.

இவனது நோய் குணமாகாது என்று எனக்கும் தெரியும். அதற்காக இவனை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். 30 வயதுக்கு மேல் இவன் உயிருடன் இருக்க மாட்டான் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருந்தாலும் இவனைப் பார்த்துக்கொள்வேன். இன்று எங்களுக்கு யாரும் இல்லை. நான் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து சம்பாதிக்கிறேன். ஒரு வீட்டிலும் வேலை செய்கிறேன். நான் வேலைக்குச் செல்லும்போது, இவனை வீட்டு வாசலில் உட்கார வைத்துவிடுவேன். அக்கம்பக்கத்தினர் பார்த்துக்கொள்கிறார்கள்” என்கிறார் சு ஸியாவோபிங்.

அம்மாவை தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள்!

Lethal autonomous weapons (LAWS) என்பது ராணுவத்துக்காக உருவாக்கப்பட்ட ஒருவகை ரோபோ. இதை இயக்கி, எதிரிகளின் கருவிகளை மட்டுமின்றி மனிதர்களையும் எளிதாகத் தாக்கி அழித்து விடமுடியும். ரோபா ஆயுதங்கள், கொலைகார ரோபோக்கள் போன்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன. இவற்றை நீர், நிலம், ஆகாயம், கடல் என்று சகல இடங்களிலும் செலுத்தமுடியும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் குறிப்பிட்ட மனிதரையோ, இலக்கையோ மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு அழித்துவிடும் ஆற்றல் இதுக்கு உண்டு! மனிதன் ஒரே ஒரு கட்டளை கொடுத்தால் போதும், வேலையைக் கச்சிதமாக முடித்துவிடும்.

இந்தத் தானியங்கி கொலைகார ரோபோக்களால் ஒரு நகரத்தைக் கூட விரைவில் அழித்துவிடமுடியும், மனிதனைப்போல் 100 மடங்கு விரைவாகச் செயல்படுகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். மனிதனின் கட்டளை என்ற ஒரே ஒரு பாதுகாப்பு மட்டுமே தற்போது இந்த ரோபோக்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது. விரைவில் அல்லது எதிர்காலத்தில் தானாகவே செயல்பட ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்கிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து கொலைகார ரோபோக்களுக்கு எதிராகப் போராட்டங்களும் கையெழுத்து இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. த

டை செய்ய வேண்டும் என்று ஸ்டீபன் ஹாகிங், நோம் சோம்ஸ்கி போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உலகில் இருக்கும் ஆயுதங்களைக் குறைத்தல் மற்றும் அழித்தல் அமைப்பின் தூதுவர் அமன்தீப் கில், “ரோபோக்களால் உலகைக் கைப்பற்றிக்கொள்ள முடியாது. இன்றும் மனிதனே மகத்தானவன். அதனால் அளவுக்கு அதிகமாகப் பயப்படத் தேவை இல்லை” என்கிறார். இவ்வளவு பெரிய ஆபத்து இல்லை என்றாலும் கூட குற்றச் செயல்கள் இந்த ரோபோக்களால் அதிகரிக்கும் என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.

ரோபோக்களே, ஐசக் அசிமோவ் சொன்ன மூன்று விதிகளைக் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x