Published : 08 Aug 2014 08:25 PM
Last Updated : 08 Aug 2014 08:25 PM

தமிழகத்தில் அனுமதியின்றி மகளிர், குழந்தைகள் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை: பேரவையில் மசோதா தாக்கல்

தமிழகத்தில் அரசின் முறையான அனுமதி இல்லாமல், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், காப்பகங்களை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தாக்கல் செய்த சட்ட மசோதா விவரம்:

'தங்களுடைய வீடுகளில் இருந்து தொலைவில் உள்ள இடங்களில் தங்கும் பெண் குழந்தைகளும், பெண்களும் குழந்தைகளின் காப்பகங்கள், சிறுமிகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்களின் விடுதிகள் போன்றவற்றில் தங்கி இருக்கின்றனர்.

அத்தகைய வசதிகள் சாதாரணமாக அரசால், தொண்டு நிறுவனங்களால், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களால், கல்வி மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக கற்றுக்கொடுக்கும் மற்றும் பயிற்சி மையங்களால், கல்விசாரா நிறுவனங்களால், குழுமங்களால் அல்லது தொழில்துறை நிறுவனங்களால், தனிநபர்களால் நடத்தப்படுகின்றன.

தங்கள் வீடுகளில் இருந்து தொலைவான இடங்களில் தங்கியிருக்கும் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பது மற்றும் அவர்களது நல்வாழ்வை உறுதி செய்வதற்காக 26-6-14 தேதியிட்ட அரசாணையில் புதிய வழிகாட்டு நெறிகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சட்டம் ஒன்றை இயற்றுவதன் மூலம், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், தங்கும் விடுதிகள், காப்பகங்கள் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

உரிமம் மற்றும் பதிவு சான்றிதழில் குறிப்பிடப்படும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் முதலாவது குற்றமாக இருப்பின் குறைந்தபட்சம் 2 ஆண்டு, அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட குற்றமாக இருந்தால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்' என்று சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x