போட்டித்தேர்வு தொடர் 21: மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள்

போட்டித்தேர்வு தொடர் 21: மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள்
Updated on
2 min read

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி.- 21 -

எந்தவொரு போட்டித் தேர்வுக்கும், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஊரக வளர்ச்சி பிரச்சினைகள் பற்றி ஒவ்வொரு ஆர்வலரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக முதல்நிலை தேர்வுக்கு சராசரியாக 3-4 கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதன்மைத் தேர்வு, நேர்காணலிலும் இதுபற்றி விவரிக்க 1 அல்லது 2 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பெண்கள் அரசியல் அதிகாரம்

அரசியலமைப்பின் 243D பிரிவு (3) பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்து, மொத்த இடங்களில் மூன்றில்ஒரு பங்கு இடஒதுக்கீட்டை பெண்களுக்கு கட்டாயமாக்குகிறது. தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறனை மேம்படுத்த, அரசின் பின்தங்கிய பகுதிகளுக்கான மானியநிதி திட்டம், ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் யோஜனா மற்றும் பஞ்சாயத்து மகிளா ஏவம் யுவ சக்தி அபியான்(PMEYSA) போன்ற அரசு திட்டங்களின் கீழ் அரசு தொடர்ந்து முயற்சிமேற்கொண்டு வருகிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த உறுப்பினர்களில் 14.4 சதவீதம். 2021-ம்ஆண்டு மாநிலங்களவை பிரதிநிதிகளில் 29 பேர் பெண் உறுப்பினர்கள். இது மொத்த உறுப்பினர்களில் 12.24 சதவீதம். 2021 தமிழக சட்டப்பேரவைதேர்தலில் மொத்த வேட்பாளர்களில் 10.33 சதவீதம் பேர் பெண் வேட்பாளர்கள். மொத்த தொகுதிகளில் 5.13 சதவீத தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் பாலின இடைவெளி, ஆண் - பெண் வேறுபாட்டை குறைக்கவும், பெண்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அவர்களது சமூக - பொருளாதார நிலையை மேம்படுத்தவும், பல்வேறு துறைகளில் பங்களிப்பை வழங்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது. சமூக,பொருளாதார, அரசியல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாலின இடைவெளியை நீக்குவதற்கு மத்திய அரசால் எடுக்கப்பட்ட சில முக்கிய முயற்சிகள் பின்வருமாறு:

பொருளாதார பங்கேற்பு

‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’(Beti Bachao Beti Padhao): பெண் குழந்தைகளின் உயிர், பாதுகாப்பு, கல்வியை உறுதி செய்கிறது.

இளம்பெண்களுக்கான திட்டம்:

11-18 வயது இளம்பெண்களின் மேம்பாட்டை நோக்கமாக கொண்டுள்ளது.

பணிபுரியும் பெண்கள் விடுதி: பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா பெண்களின் பெயரிலும் வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசிய குழந்தை காப்பகத் திட்டம்: குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை வழங்குவதன் மூலம் பெண்கள் லாபகரமான வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

பிரதமரின் கவுஷல் விகாஸ் யோஜனா: இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரம் சிறக்க, தொழில் சார்ந்த திறன் பயிற்சியை வழங்குவது.

தீன்தயாள் உபாத்யாய் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்: திறன் மேம்பாட்டில் பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது.

சுகன்ய சம்ரிதி யோஜனா: பெண்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை தொடங்குவதன் மூலம் பொருளாதார ரீதியாக வலுப்பெறுகின்றனர்.

திறன் மேம்பாடு மற்றும் மகிளா காயர் யோஜனா: தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் கைவினைஞர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாக கொண்ட MSME-ன் பிரத்யேக பயிற்சித் திட்டம்.

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்: குறுந்தொழில்கள் மூலம்சுய வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்ட, கடனுதவியுடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம்.

பிரதமரின் முத்ரா யோஜனா: குறு/ சிறு வணிகத்துக்கான நிறுவன நிதிக்கான அணுகலை வழங்குவது.

பெண்களின் கல்வி வளர்ச்சி

இதுதவிர, பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, தற்காப்பு பயிற்சி, பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை வழங்கும் சமக்ர சிக்‌ஷா திட்டம், பின்தங்கிய பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெண்களுக்கான கஸ்தூரிபாகாந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) மட்டுமின்றி, யுஜிசி, ஏஐசிடிஇ சார்பில் ஃபெல்லோஷிப்/ ஸ்காலர்ஷிப் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 159 மகளிர் ஆய்வு மையங்கள்நிறுவப்பட்டுள்ளன. ஐஐடி இளங்கலை படிப்புகளில் 2018-19 ஆண்டுமுதல் மாணவிகளுக்கான 5,039‘சூப்பர்நியூமரரி’ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

(அடுத்த பகுதி நாளை வரும்)

போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 20: சர்வதேச சூழலியல், சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in