Published : 12 Jun 2022 07:20 AM
Last Updated : 12 Jun 2022 07:20 AM

போட்டித்தேர்வு தொடர் 20: சர்வதேச சூழலியல், சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள்

ராம்சர் மாநாடு 1971-ல் ஈரானின் ராம்சர் நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1975-ல் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதும் இருந்து 90 சதவீத ஐ.நா. உறுப்பு நாடுகள், ‘ஒப்பந்தக் கட்சிகள்’ ஆக இதை ஒப்புக்கொண்டன. சதுப்பு நிலங்கள் தொடர்பான இந்த ஒப்பந்தம், தேசிய நடவடிக்கைக்கான கட்டமைப்பையும், சதுப்பு நிலங்கள் மற்றும் அவற்றின் வளங்களைப் பாதுகாப்பதற்கும், சிறப்பாக பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது.

இந்தியாவில் இது 1982 பிப்.,1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் தற்போது 10,93,636 ஹெக்டேர் பரப்பளவை கொண்ட 49 தளங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களாக (ராம்சர் தளங்கள்) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ‘பாயின்ட் கலிமேர் (கோடியக்கரை) வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் ராம்சர் தளம் ஆகும்.

ரியோ உச்சி மாநாடு

1992 ஜூனில்,பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில், 178-க்கும் மேற்பட்ட நாடுகள் ‘அஜெண்டா 21’-ஐ ஏற்றுக்கொண்டன, இது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு விரிவான செயல்திட்டமாகும்.

ரியோ 20

ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான மாநாடு - அல்லது ரியோ 20 - பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2012 ஜூன் 20-22 தேதிகளில் நடந்தது. இது நிலையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான மற்றும் நடைமுறை நடவடிக்கைகளைக் கொண்டதாகும். ரியோவில், உறுப்பு நாடுகள் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் (SDGs) தொகுப்பை உருவாக்குவதற்கான செயல்முறையை தொடங்க முடிவுசெய்துள்ளன, பசுமைப் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அடிப்படை வழிகாட்டுதல்களையும் மாநாடு ஏற்றுக்கொண்டது.

நிலையான வளர்ச்சி இலக்கு

இலக்கு 1: எல்லா இடங்களிலும் அதன் அனைத்து வடிவங்களிலும் வறுமையை முடிவுக்கு கொண்டுவருதல்.

இலக்கு 2: பசி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, மேம்பட்ட ஊட்டச்சத்தை அடைவது, நிலையான விவசாயத்தை மேம்படுத்துவது.

இலக்கு 3: ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வது, எல்லா வயதினருக்கும் நல்வாழ்வை மேம்படுத்துவது

இலக்கு 4: சமமான, தரமான கல்வியை உறுதி செய்தல், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துதல்

இலக்கு 5: பாலின சமத்துவத்தை அடைதல், அனைத்து பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரம் வழங்குதல்

இலக்கு 6: அனைவருக்கும் தண்ணீர், சுகாதாரம், நிலையான மேலாண்மையை உறுதி செய்தல்.

இலக்கு 7: அனைவருக்கும் மலிவு, நம்பகமான, நிலையான மற்றும் நவீன எரிசக்திக்கான அணுகலை உறுதி செய்தல்

இலக்கு 8: நீடித்த, உள்ளடக்கிய, நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், அனைவருக்கும் கண்ணியமான வேலை.

இலக்கு 9: உள்கட்டமைப்பை உருவாக்குதல், புதுமை, தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல்.

இலக்கு 10: நாடுகளுக்கு உள்ளும், நாடுகளுக்கு இடையிலும் சமத்துவமின்மையைக் குறைத்தல்.

இலக்கு 11: நகரங்கள், மனித குடியேற்றங்களை உள்ளடக்கிய, பாதுகாப்பான, மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி.

இலக்கு 12: நிலையான நுகர்வு, உற்பத்தி முறைகளை உறுதி செய்தல்.

இலக்கு 13: காலநிலை மாற்றம், அதன் தாக்கங்களை எதிர்த்து போராட அவசர நடவடிக்கை.

இலக்கு 14: நீடித்த வளர்ச்சிக்காக கடல்கள், கடல் வளங்களை பாதுகாத்தல், நிலையான முறையில் பயன்படுத்துதல்.

இலக்கு 15: நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான பயன்பாட்டை பாதுகாத்தல், மீட்டெடுத்தல், ஊக்குவித்தல், காடுகளை நிலையான முறையில் நிர்வகித்தல், பாலைவனமாக்குதலை எதிர்த்துப் போராடுதல், நிலச் சீரழிவை நிறுத்துதல், பல்லுயிர் இழப்பை நிறுத்துதல்

இலக்கு 16: நிலையான வளர்ச்சிக்கான அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை ஊக்குவித்தல், அனைவருக்கும் நீதிக்கான அணுகலை வழங்குதல், அனைத்து நிலைகளிலும் பயனுள்ள, பொறுப்புணர்வு மற்றும் உள்ளடக்கிய நிறுவனங்களை உருவாக்குதல்.

இலக்கு 17: செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல், நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டாண்மைக்கு புத்துயிர் அளித்தல்.

(அடுத்த பகுதி சனிக்கிழமை வரும்)

கடந்த ஜூன் 5-ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதில் ‘வெற்றி மேடை உனதே’ தொடரின் 7, 8, 11, 12 ஆகிய நான்கு பகுதிகளில் இடம்பெற்ற கட்டுரைகளில் இருந்து மட்டும் 14 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பலரும் தங்களது நன்றிகளையும், பாராட்டுகளையும் பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x