

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் படைப்பாளி ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) பிறந்த தினம் இன்று (ஜனவரி 29).
கடந்த 1866-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் கிளமஸி எனும் இடத்தில் பிறந்தவர் ரோமைன் ரோலண்ட். சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி கற்றார். தத்துவத்தில் பட்டம் பெற்றார். இசையையும் ஆர்வத்துடன் கற்றார்.
எழுத்தாற்றல் மிக்க இவர் 1902-ல் எழுதத் தொடங்கினார். முதலில் ஒரு சில நாடகங்கள் எழுதினார். பின்னர் கட்டுரை, வாழ்க்கை வரலாறு, நாவல்களும் எழுதத் தொடங்கினார். 1912-ல் பல்கலைக்கழகப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர எழுத்தாளரானார். இவர் இலக்கியம் மட்டுமல்லாமல் நாடகம், கலை, கட்டுரை, வரலாறு, தத்துவம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினார்.
டால்ஸ்டாயின் படைப்புகள், பீத்தோவன் இசை, மைக்கலேஞ்சலோவின் ஓவியம் ஆகியவை வெகுவாகக் கவர்ந்ததால், அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. ஒருமுறை தாகூரைச் சந்தித்தபோது, இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற தனது ஆர்வத்தை தெரிவித்தார். ‘விவேகானந்தரைப் படித்தால் இந்தியாவைப் புரிந்துகொள்ளலாம்’ என்று தாகூர் கூற, ஆங்கிலம் தெரிந்த தன் சகோதரியின் உதவியோடு விவேகானந்தரின் நூல்களைப் படித்தார்.
இவர் தன் வாழ்நாள் முழுவதும் பாசிஸத்தை எதிர்த்தும் உலக அகிம்சையை ஆதரித்தும் எழுதினார். மனிதநேயத்தை வலியுறுத்தும் ‘அபவ் தி பேட்டில்’ நூலைப் படைத்தார். ‘மானிட இனம் பரஸ்பரம் அன்பால் ஒன்றிணைய முடியாதா’ என்ற கேள்வி இவருக்குள் எழுந்தது. இதையே கருப்பொருளாக்கி ‘ஜீன் கிறிஸ்டோஃபி’ என்ற நாவலை எழுதினார். இது 10 தொகுதிகளாக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படைப்புக்காக 1915-ல் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது.
காந்தியை மிகவும் நேசித்தார். வாழ்நாள் இறுதிவரை அவருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கும் மனிதராக காந்தியை இவர் தன் நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் தன்னை முத்தமிட்டதை புனித பிரான்சிஸ் மற்றும் டொமினிக் ஆகியோரின் முத்தத்தோடு ஒப்பிட்டு மகிழ்ந்தார். காந்தி குறித்து 1924-ல் ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
நாவலாசிரியர், நாடகாசிரியர், வரலாற்று அறிஞரான ரோமைன் ரோலண்ட் தனது 78-வது வயதில் 1944-ம் ஆண்டு மறைந்தார்.