Published : 18 Oct 2022 06:08 AM
Last Updated : 18 Oct 2022 06:08 AM
அரசுப் பள்ளிகளில் புதிதாக மலர்ந்திருக்கும் மாற்றங்களுள் முக்கியமானது, உலகத் திரைப்படங்களைத் திரையிடுதல். மாதமொரு திரைப்படம் என்ற வரிசையில் இம்மாதம் Red Balloon படம் திரையிடப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் சிவப்பு பலூன்களை ஊதி மகிழ்ந்தபடி குழந்தைகள் தங்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். பார்த்து மகிழ்ந்ததோடு நின்று விடவில்லை. கலந்துரையாடல், கதையை மாற்றி எழுதுதல், விளையாட்டு, தொழில்நுட்பம் சார்ந்த புரிதல்கள், படம் ஏற்படுத்திய தாக்கத்தை ஓவியமாக வரைதல் எனக் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் ஏராளமான செயல்பாடுகளும் நிகழ்ந்தன.
அருகிலிருக்கும் படைப்பாளர்கள் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளோடு திரைப்படம் குறித்து கலந்துரையாடவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. மதுரை நகரில் மகபூப்பாளையம் பகுதியில் இருக்கும் அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நிகழ்ந்த திரையிடலில் குழந்தைகளோடு கலந்துரையாட சென்றிருந்தேன். 1956-ம் ஆண்டு இத்தாலியில் எடுக்கப்பட்ட குழந்தைகள் திரைப்படம் Red Balloon. ஏறத்தாழ அரைமணி நேரமே ஓடினாலும் இன்றுவரை குழந்தைகள் விரும்பும் படமாகவே இருக்கிறது. படம் முடிந்ததும் 6-ம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடத் தொடங்கினேன். படம் எப்படி இருந்தது? என்றேன்.
பலூன் எல்லாம் பறந்து வந்தது, பையன் கூடவே பலூன் சென்றது, நீல நிற பலூன் பறந்து வந்தது, பலூனோடு சிறுமி வந்தது என்று பிடித்ததையெல்லாம் சொன்னார்கள். பிடிக்காத காட்சிகளைச் சொல்லுங்க என்றேன். பசங்க எல்லாருமா சேர்ந்து பலூனை உடைத்தது, பள்ளியில் சிறுவனைத் தனி அறைக்குள் அடைத்து வைத்தது, பலூனை உடைக்கவே எல்லோரும் அலைவது, பஸ்ஸில் பலூனோடு செல்ல அனுமதிக்காதது, எல்லா இடங்களிலும் பலூனை அனுமதிக்க மறுப்பது என்று பட்டியலிட்டனர். இரண்டு கேள்விகள் சார்ந்த பகிர்வில் வகுப்பறையின் தயக்கங்கள் மெல்லமெல்ல விலகத் தொடங்கின. மனதில் தோன்றியதைப் பகிரலாம் என்றேன்.
படம் முழுக்க ஏன் அந்தப் பையன் நடந்துக்கிட்டே இருக்கான்? எல்லாருமே எப்படி பலூனை வெறுக்கறவங்களா இருக்காங்க? ஏன் அந்தப் பையனுக்கு பிரண்டே இல்ல? என்ற கேள்வி மாணவியருக்குள் சிறு கலந்துரையாடலைத் தொடக்கிவைத்தது. பலூன் கொண்டு வந்தான்ல அதுக்குத்தான் தண்டனை. அவனா கொண்டு வரல. பலூன் தான் அவன்கூட வந்துச்சு. அதுக்கு ஏன்அவனைத் தண்டிக்கணும்? என்ற கேள்வியால் கலந்துரையாடல் தடுமாறியது. பலூனுக்கு உயிர் இருக்குமா? என்ற கேள்வியால் வகுப்பறை களைகட்டியது. உயிர் இருக்காது. பிறகு ஏன் கூடவே வருது? சொல்றதைக் கேட்குது? அவனுக்கு அது நல்ல பிரண்ட். அவன் பாசமா இருக்குறான். அதனால அதுக்கும் உயிர் வந்துடுது. அதெப்படி பலூனுக்கு உயிர் வரும்? அது கேஸ் பலூன். அப்படின்னா மேலயே போயிரும்ல. கூடவே வருதே! சிறிது சலசலப்பு.
நமக்கு உயிர் காற்றால் தான். நாம் ஆக்சிசனால் உயிர் வாழுறோம். பலூனுக்கு உள்ளே காற்று தான் இருக்கு. அதான் உயிர் இருக்கு. என்று தொடர்ந்த பேச்சுகள் கலந்துரையாடலின் சுவையைக் கூட்டின. படத்தின் காட்சி அல்லது இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றியதைப் படமாக வரையுங்க என்று கூறினேன். பலூனா இருந்தாலும் அன்பு காட்டுது. நாம் அன்பு வைத்தால் அந்தப் பொருள் நம்மீது அன்பு காட்டும் என்பது ஆச்சரியம். படம் பூராவும் பசங்களாகவே இருக்காங்க. அந்த ஊரில் பெண் பிள்ளைகளே இல்லையா? புளு கலர் பலூன் வச்சிருக்கும் பெண்ணோடு அந்தப்பையன் கொஞ்ச நேரமாவது விளையாடியிருக்கலாம் என பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்கள்.பல்வேறு அழுத்தங்கள் உள்ள நிறுவனமான பள்ளியில் இதுபோன்ற நிகழ்வுகளே குழந்தைகளைப் பூக்க வைக்கின்றன. என் மனதுள், அந்த ஊரில் சிறுமிகளே இல்லையா? என்ற கேள்வி சுழன்று கொண்டே இருக்கிறது.
கட்டுரையாளர்
பள்ளி ஆசிரியர்,“கலகல வகுப்பறை, சீருடை-ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்" உள்ளிட்டநூல்களின் ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT