Last Updated : 14 Sep, 2022 06:38 AM

 

Published : 14 Sep 2022 06:38 AM
Last Updated : 14 Sep 2022 06:38 AM

தேவை... கல்வி பற்றிய உரையாடல்கள்

ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வெளியானதும் ஒரே சலசலப்பு இருக்கும். நம்ம சிஸ்டம் சரியில்லை, நம்ம சிலபஸ் சரியில்லை, இன்னும் முன்னேற்றனும் என பேசிக் கொண்டே இருப்பார்கள்.

எல்லாமே, தான் படித்த காலத்தில் இருந்ததை வைத்தே பேசுவார்கள். உண்மையில் சிஸ்டத்தில் மாற்றம் என்றால் என்ன? இந்த சிஸ்டம் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் உரையாடல்கள் இன்னும் வலுப்பெறும்.

வேறு எப்போதை விடவும் தமிழகத்தில் சில ஆண்டுகளாக பள்ளிக்கல்வி பற்றிய விவாதங்களை முழு வீச்சில் கல்வித்துறையில் அல்லாதவர்களும் முன்னெடுக்கிறார்கள். பெற்றோர்கள் நிறைய பேசுகிறார்கள். கல்வி ஒரு சமூகத்தில் உரையாடலாக மாறும்போதே அது வலுவானதாக இன்னும் மாறும்.

கல்விமுறை என பேசப்படுவது 1.பாடத்திட்டம் 2. கற்பிக்கும் முறை 3. மதிப்பிடும் முறை எனும் மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. இவற்றில் பாடத்திட்டம் என்பது என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பது. என்னென்ன திறன் எந்த வயதில் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக இரண்டாம் வகுப்பில் கணித திறன்களில் - இரண்டு இலக்க எண்களை கூட்டுவது என வைத்துக்கொள்வோம். இது பாடத்திட்டம். இந்த திறனை எப்படி சொல்வது என்று தீர்மானித்து அதனை பாடபுத்தகத்தில் பாடமாக மாற்றுவார்கள். ஒவ்வொரு பாடத்துக்கு பின்னும் இப்படி ஒரு திறன் வளர வேண்டும் என்ற அடைவு இருக்கும். இப்போது பாடத்திட்டம் தயார், பாடப்புத்தகமும் தயார்.

அடுத்து கற்பிக்கும் முறை. வகுப்பில் இந்த பாடத்தை எப்படி கற்பிப்பது என்றும் திட்டமிடுவார்கள். முதலில் இரண்டு இலக்க எண்ணை சொல்லித்தருவது. கூட்டலை சொல்லித்தருவது.

ஆங்கிலத்தில் Pedagogy எனப்படும் கற்பிக்கும் முறை காலத்திற்கு ஏற்ப மாறும். பாடபுத்தகத்தில் இருந்து மாணவன் கற்றதை எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கின்றார் என்பதை அளக்கவே மதிப்பீடுகள் நடைபெறுகின்றன.

இரண்டு இலக்க எண்களை சரியாக கூட்டுகின்றார்களா? மதிப்பீடுகள் எழுதும் தேர்வாகவோ, சொல்லும் தேர்வாகவோ, செயல்பாடுகள் மூலமாகவோ இருக்கலாம். இதுவும் வகுப்பிற்கு ஏற்றவாறு மாறும். இதுதான் மொத்த சிஸ்டம். கல்விமுறை.

பிரச்சினை சிலபஸில் இல்லை

ஒவ்வொரு வகுப்பாக தேறி தேறி அடுத்த வகுப்புக்கு சென்று மாணவர் பள்ளிக்கல்வியை முடிக்கிறார். இதில் எங்கே மாற்றம் வேண்டும் என உரையாடல்கள் நீள வேண்டும். சமீபத்திய பாடபுத்தகங்களை பார்க்காமலே தான் முக்கால்வாசி பேர் சிலபஸ் மாற்றணும் என்கிறார்கள். தேவையான மாற்றங்கள் அங்கே நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஆனால், அதையும் தாண்டி தேவைப்படும் மாற்றங்கள் குறித்து இங்கு பேசுவோமா! பொதுவாக கற்பிக்கும் முறை என்பது வகுப்பில் 25 மாணவர்கள் இருப்பார்கள், அவர்கள் வகுப்பினை கவனிக்கும்படி அமர்ந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. இங்கேதான் சிக்கல்.

அவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாக வருவது, பள்ளியின் கட்டமைப்பு, பள்ளிக்கட்டிடத்தின் இதர சிக்கல்கள், வாழ்விடம், சுத்தமான வகுப்பறை, சுகாதாரமான கழிவறைகள், இத்தனை மாணவர்களுக்கு இத்தனை ஆசிரியர்கள், வயிறு நிறைந்த குழந்தைகள், ஆசிரியருக்கான கற்பிக்கும் சுதந்திரம் என தலையிட வேண்டிய இடங்கள் ஏராளம்.

அது போல மதிப்பிடும் முறை. மனனம் செய்து எழுதுகிறார்கள், அவர்களால் சிந்திக்க முடியவில்லை என்பது எல்லாம் மதிப்பீட்டு முறைகளை மறுபார்வைக்கு உட்படுத்தாததால் வந்த சிக்கல்கள். ஆனால், எந்த ஏட்டிலும் மனப்பாடம் செய்து எழுதினால் மதிப்பெண் என்று கிடையாது. அது நடைமுறையில் எழுந்த சிக்கல்.

மூன்றுமே தனித்தனியாக இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்ததுதான். கற்பிக்கும் முறை சிறப்பாக இருந்தால்தான் மதிப்பீடு முறையில் செய்யப்படும் மாற்றங்களுக்கான பலனை பார்க்கலாம். பாடத்திட்டம் வலுவானதாக இருந்தால்தான் கற்பிக்கும் முறை சிறப்பானதாக இருக்கும். நாம் பேசும் பிரச்சினைகள் சிக்கல்கள் அனைத்தையும் இந்த கூறுகளுக்குள் அடக்கி விடலாம். கல்விக்கு துணை நிற்கும் இதர தூண்களையும் வலுப்படுத்த வேண்டும்.

நூலகம், பள்ளி மைதானங்கள், கலை சார்ந்த திறன்கள் மற்றும் ஒரு குழந்தையை ஆளுமையாக மாற்றும் அத்தனை முன்னெடுப்புகளும் இதில் அடங்கும். ஏனெனில் எண்ணும் எழுத்தும் மட்டுமே பள்ளியின் பயன் அல்லவே.

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்

தொடர்புக்கு: umanaths@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x