Last Updated : 28 Feb, 2024 04:33 AM

 

Published : 28 Feb 2024 04:33 AM
Last Updated : 28 Feb 2024 04:33 AM

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து...

பாடப் புத்தகத்தில் உள்ள எந்த ஒரு சிறிய விஷயத்தையும் புறந்தள்ளாமல், நுணுகி நன்கு ஆராய்ந்து, பல முறை படித்துப் பார்த்து, படித்ததை புரிந்து கொண்டு, தேர்வு எழுதினால், மிகச் சிறந்த மதிப்பெண்களை பெற இயலும்.

என் தந்தை நல்லாசிரியர் புலவர் நடேச நாராயணனிடம், பூரணத்துவம் (பர்ஃபெக்க்ஷன்) என்பது பற்றி ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தேன். “எந்த செயலை நாம் செய்வதாக இருந்தாலும், அதனை ரசித்து, முழு ஈடுபாட்டோடு மகிழ்வுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த செயல் பூரணத்துவம் நிறைந்ததாக இருக்கும்.

உதாரணமாய், ஒரு மேசையைத் துடைக்க வேண்டும் எனில், கண்ணுக்குப் புலப்படும் மேற்புறத்தை மட்டும் சுத்தப்படுத்தினால் போதாது, கண்ணுக்கு புலப்படாத ஒவ்வொரு இணைப்பின் உட்புறத்திலும்கூட, முழு மையாய் சுத்தப்படுத்த வேண்டும். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் விட்டுவிடாமல், புறக்கணிக்காமல், அனைத்திலும் முழுக் கவனம் செலுத்தும் போது, அச்செயல் தானா கவே முழுமை பெறும்” என்று கூறினார்.

ஒரு செயலைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், படிப்பது, எழுதுவது, உரை நிகழ்த்துவது போன்ற அனைத்திற்கும் அவர் கூறிய உண்மை முற்றிலும் பொருந்தும். எந்த ஒரு சிறு விஷயத்தையும் புறக்கணிக்காமல், உற்று கவனித்து ஈடுபாட்டுடன் செய்யும் போதுஅந்த செயல் பூரணத்துவம் நிறைந்த தாக மிளிரும்.

நானும் கூட ஒரு விஷயத்தை உன்னிப்பாய் கவனிக்கத் தவறியுள்ளேன். நான் எந்த கட்டுரையை எழுதினாலும், முதலில் அதனை என் அருமை நண்பருக்கு அனுப்பி அவரது கருத்தினைக் கேட்பேன். அவர் அதை படித்துப்பார்த்து, கட்டுரை மிக அருமையாக இருப்பதாகக் கூறி, நான் வைத்த தலைப்பை மட்டும் மாற்றி அனுப்புவார். எனது பல கட்டுரைகளின் தலைப்புகளை அவர்தான் எனக்கு தாரை வார்த்தார்.

ஒரு முறை அவரிடம் கதைகள், கட்டுரைகள் எழுதும் கலை பற்றி பேசிக் கொண்டிருந்த போது, “உங்க கட்டுரையில் நீங்கள் எழுதும் விதமும், கருத்துக்களும் மிக அருமையாக இருக்கின்றன, கருத்துக்களில் இருக்கின்ற ஆழமும், கவர்ச்சியும் உங்களது தலைப்புக்களில் இல்லை. அதனால் கட்டுரையின் தலைப்பை இன்னும் சற்று நிதானமாய் சிந்தித்து எழுதினால், மிகச் சிறப்பாய் அமையும்” என்று அவர் கூறினார்.

அதன்பின்னர் இதுபற்றி சற்று ஆழமாய் சிந்திக்கத் தொடங்கினேன். என் அனுபவத்தில் நான் கண்டவற்றையும், நண்பர்களிடம் உரையாடும் போது நான் கேட்டவற்றையும்தான் கட்டுரையாக எழுதுகிறேன். எழுதி முடித்தபின், குறைந்தபட்சம் மூன்று முறை படித்துப் பார்ப்பேன். எழுத்தாளராய் ஒரு முறை, வாசகராய் ஒரு முறை, பத்திரிகையாளராய் ஒரு முறை என என்னை முன்நிறுத்தி, அந்தக் கண்ணோட்டத்தில் படித்துப் பார்ப்பேன்.

நண்பர் சொன்னபிறகுதான், தலைப்பின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். நாம் எழுதுவதை, பிறர் முழுவதும் படிக்க வேண்டும் எனில், முதலில் அதன் தலைப்பு வாசகர்களைக் கவரக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

நாம் எழுதுவது ஒரு கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதையாகவோ அல்லது நாவலாகவோ, இவற்றில் எந்தவடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். மையக் கருவிற்கு நாம் எந்தஅளவிற்கு முக்கியத்துவம் தருகிறோமோ, அதைவிட அதிக அளவுமுக்கியத்துவத்தை, அதன் தலைப்பிற்கும் தர வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

படிப்பவரின் சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவும், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், ஒரு தலைப்புஇருக்க வேண்டும்.

சின்ன தலைப்பு தானே என்று அலட்சியமாய் அதனை ஒதுக்காமல், என்ன தலைப்பு பொருந்தும் என சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஆம், சிறிய செயலாக இருந்தாலும், சிரத்தையோடு கவனிக்க கற்றுக் கொண்டால், பெரிய சாதனைகளை செய்ய இயலும்.

- கட்டுரையாளர் தலைமையாசிரியர், அரசினர் மேல் நிலைப் பள்ளி, சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x