குடியரசு தினம் 75 | இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை என்னும் முதல்வன்

குடியரசு தினம் 75 | இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை என்னும் முதல்வன்
Updated on
2 min read

ஒரு கட்டுரை எழுத தொடங்கும்போது அந்த கட்டுரை எதைப் பற்றியது எந்தெந்த தகவல்களை தாங்கி வருகிறது என்று ஒரு சிறு முன்னுரை எழுதுவோம் இல்லையா?

அதுபோல நமது அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரைதான் முகவுரை.மற்ற நாடுகளில் முடியரசு என்ற முழக்கம் கேட்டபோது இந்தியாவில் குடியரசு கொண்டாட்டம் தொடங்கியது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் தலைவராக இருந்தார். அரசியல் அமைப்பு சட்ட வரைவுக் குழு தலைவராக இருந்து அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.

நமது அரசியல் அமைப்பின் முகவுரை அழகாக 'இந்திய மக்களாகிய நாம் என்று தொடங்குகிறது'. வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு இது. அதாவது, 'இந்திய மக்களாகிய நாம் நம்மை ஆட்சி செய்வதற்காக நாமே ஒரு ஒழுங்கு முறையை வகுத்துக் கொள்கிறோம்' என்ற பொருளில் அதுஆரம்பிக்கிறது.

வெளியில் இருந்துவேறு யாரோ நமக்கான சட்டத்தை எழுதி தந்துவிடவில்லை. நாம் தான் நாம் எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று எழுதிக்கொண்டோம்.‌ இந்திய மக்களாகிய நாம்தான் இந்திய அரசியலமைப்பின் ஆதாரம். இந்திய அரசியலமைப்பு தனது அதிகாரத்தை மக்களிடமிருந்தே பெற்றிருக்கிறது.‌ நம்மை ஆட்சி செய்யும் அதிகாரத்தை நாம்தான் சட்டத்திற்கே வழங்கி இருக்கிறோம்.‌

நமக்காக நாமே! - இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என்று முகவுரை கூறுகிறது. இப்படி அமைக்கப்படும் அரசாங்கம் குடிமக்களுக்கு பல உறுதிகளை வழங்குகிறது.‌

கருத்துகளை சிந்திப்பதற்கு அதனை வெளிப்படுத்துவதற்கு ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வைப்பதற்கு, மேலும் நமக்குப் பிடித்த கடவுளை வழிபடுவதற்கு நமது அரசியலமைப்பு சட்டம் சுதந்திரம் வழங்குகிறது.

மேலும் ஒருவர் தன் நிலையை உயர்த்திக் கொள்வதற்கும், கல்வி வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில் சாதி, சமய, ஆண், பெண், மதம் அடிப்படையில் வேறுபாடுகள் காட்டப்படாது.

மேலும் மக்களின் எண்ணங்களை மற்றவர்களுக்கு கொண்டு செல்லவும் சமமான வாய்ப்புகள் உண்டு.

தனிமனிதன் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் அனைவரும்சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் வகை ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கிறது.

இப்படி எழுதப்பட்ட நமது அரசியலமைப்பு சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதுதான் நாம் கொண்டாடும் குடியரசு தினம்.

முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் கொண்டது. இறையாண்மை என்று முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாடு எந்த ஒரு அந்நிய சக்திகளாலும் கட்டுப்படுத்தப்படாத நாடு என்பதைக் குறிக்கிறது. அடுத்ததாக, சிலர் மட்டுமே கோடீஸ்வரர் ஆக முடியும், பலர் குடிசையில்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற பேதம் இல்லை என்பதை சமதர்மம் குறிக்கிறது.

மதச்சார்பற்றது என்ற சொல் அரசுக்கு சொந்தமான எந்த மதமும் இருக்காது என்பதைக் குறிக்கிறது. எனக்கு எல்லா மதமும் சம்மதம் என்பதைவிட, எந்த மதத்திலும் எனக்கு சம்மதம் இல்லை என்றுதான் அரசாங்கக் கொள்கை இருக்கும்.

நமக்காக நாமே செய்யும் ஆட்சி என்பது தான் ஜனநாயகத்தின் தாத்பரியம்.‌ உயரிய அதிகாரம் மக்களிடம் இருக்கிறது என்பதைக் காட்டும் ஓர் உயர்ந்த அரசாங்கம் ஜனநாயகம்.

நிறைவாக முகப்புரையில் குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் உச்ச பதவியில் இருக்கும்குடியரசுத் தலைவர் இங்கிலாந்தில் அதிபரோடு ஒப்பிடப்படுகிறார். ஆனால் அது முடியரசு.

முடியரசுஎன்பது பரம்பரை பரம்பரையாகவருவது.‌ இங்கே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.‌அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியே செயல்படுவதே அவரது கடமை. இதுதான் இந்தியக் குடியரசின் சிறப்பு.

- கட்டுரையாளர்: அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினர்; தொடர்புக்கு: suriyadsk@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in