Last Updated : 09 Jan, 2024 04:30 AM

 

Published : 09 Jan 2024 04:30 AM
Last Updated : 09 Jan 2024 04:30 AM

சிரித்து வாழ வேண்டும்...பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...

“இடுக்கண் வருங்கால் நகுக” என்கிறார் வள்ளுவர். “சிரிக்காத நாள் வீணாய்ப் போன நாள்” என்கிறது ஒரு பிரெஞ்சுப் பழமொழி. “வாய் விட்டுச் சிரித்தால், நோய்விட்டுப் போகும்” என்பது மூத்தோர் வாக்கு. “சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?” என்று கேட்டார் கவிஞர் கண்ணதாசன். வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது, சிரிப்பு சத்தம் கேட்கும் போதெல்லாம் அது திறந்து கொள்கிறது என்றும் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் இருதயம் ஒட்டடை அடிக்கப்படுகிறது என்றும் கூறினார் கவிஞர்வைரமுத்து.

ஆம், நம் மன அழுத்தத்தைப் போக்கும் வழிகளில் மிகச் சிறந்த வழி, மனம் விட்டு சிரிப்பதுதான் என நான் கருதுகிறேன். உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு புன்னகை புரிவதோ அல்லது வாய்விட்டுச் சிரிப்பதோ நமது மனதை லேசாக வைக்க உதவும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

அன்னாளில், மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளித்த ஆசிரியர் பணி, இன்னாளில் மன அழுத்தத்தையும், மன வருத்தத்தையும் அளிப்பதாக பல ஆசிரியர்கள் கருதுகின்றனர். குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இத்தகைய மன நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தொலைத் தொடர்பு சாதனங்கள் இணையதளம் போன்றவற்றின் பயன்பாடு, கரோனா கால வீட்டு முடக்கம்ஆகிய காரணங்களால் மாணவர்களின் நடவடிக்கைகளில் பலவித விரும்பத்தகாத மாற்றங்கள் காணப்படுகின்றன. மாணவர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளால், பல ஆசிரியர்கள் மன நிம்மதியை இழக்கின்றனர்.

இத்தகைய சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மாணவர்களை நெறிப்படுத்தும் பணியையும் சேர்த்துசெய்ய வேண்டிய நிர்பந்தம் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. இதுதவிர, ஆசிரியர்களின் குடும்பங்களிலும் ஒரு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. இத்தகைய மன நிலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், தினமும் ஒரு நிமிடமாவது சிரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

தங்கள் மனதிற்குள் சுமந்து கொண்டிருக்கும் பலவிதமான எண்ணங்களின் அழுத்தத்தினால், சோர்ந்திருக்கும் ஆசிரியர்கள், வகுப்பறைக்கு செல்வதற்கு முன் சற்றே புன்னகைத்து விட்டு செல்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

அரையாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு முன் ஆசிரியர்களுக்கான ஒரு ஆயத்தக்கூட்டம் நடத்தினேன். அப்போது, “நீங்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடுகின்ற இடத்தில், நாளை முதல் ஒரு ஜோக் எழுதிய பேப்பர் வைக்கப்போகிறேன். அதைப் படித்து சிரித்த பின், வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடுங்கள்.

ஒரு வேளை நான் வைக்கின்ற ஜோக், உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லையெனில், ‘சிரிப்பே வராத செய்தியை, ஜோக் என்று நினைத்து நம் தலைமையாசிரியர் வைத்துள்ளாரே’ என்று எண்ணி அந்த எண்ணத்தின் அடிப்படையிலாவது சிரித்துவிட்டு செல்லுங்கள்” என்று கூறினேன். இதை நான் சொல்லும்போதே சில ஆசிரியர்கள் சிரித்தனர்.

“இன்றைய நாள் சிறப்பாக இருப்பதற்கும், சிறப்பின்றி இருப்பதற்கும் உங்களின் மனநிலையே, காரணம் என்பதை அறிவீர்களா? அவ்வாறெனில், இன்றைய நாளில் உங்களது மனநிலையை எப்படி வைத்திருக்கப் போகிறீர்கள்? சந்தோஷமாகவா? அல்லது சோகமாகவா?” என்று டைப் செய்த ஒரு தாளையும், அதன் அருகில் கூகுளிலிருந்து தேடி எடுத்த ஒரு ஜோக்கின் பிரிண்ட் பேப்பரையும் தினமும் வைக்கிறேன்.

அதைப் படிக்கும் ஆசிரியர்களில் சிலர் சிரித்துவிட்டும், சிலர் புன்னகைத்துவிட்டும் செல்கின்றனர். எனதுஇந்த செயலுக்கு பலன் இருக்கிறதோ, இல்லையோ ‘சிரிக்க வேண்டும்’ என்றஎண்ணத்தை தினமும் நினைவுபடுத்துவது ஒரு வகையில் ஆரோக்கியமான செயலாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x