சிறகு நண்பர்கள்...

சிறகு நண்பர்கள்...
Updated on
2 min read

அழகான நமது பூமியில் தினமும் நாம் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். என்றேனும் நம்மைச்சுற்றி இருக்கும் சிறகு நண்பர்களைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? இந்தியா முழுவதும் பரவலாக தோன்றும் செந்தலையன் பஞ்சுருட்டான் ரோப்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இது விஞ்ஞான ரீதியாக மீப்பாஸ் லெஸ்செனால்டி என்று அழைக்கப்படுகிறது. ஆண், பெண் இரண்டும் ஒன்று போல் தோன்றும். பிப்ரவரி முதல் மே வரையிலான காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். இதன் உடல் முழுவதும் பச்சை நிறத்தைக் கொண்டது. தலையும் கழுத்துப் பின் பகுதியும் காவி நிறத்தைக் கொண்டிருக்கும். கண்ணைச் சுற்றி அழகான ஒரு கருப்பு பட்டையை காணலாம்.

மெலிதாகவும் பச்சை நிறத்திலும் இருக்கும். குளிர்காலங்களில் தமிழ்நாடு எங்கும் குடிபெயரும் ஏராளமான பஞ்சுருட்டான்கள் மேலே கட்டியிருக்கும் மின் கம்பிகளிலும், டெலிபோன் கம்பிகளிலும் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்திருக்க முடியும். அடுத்ததாக, பூநாரை, அன்னப்பறவை இனத்தைச் சேர்ந்த ஓர் அரிய பறவை. நாலரை அடி உயரம்வளர்ச்சி அடையும். இப்பறவைகள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளிலும் குளிர்கால விருந்தாளியாக ஒன்று சேர்வதுண்டு. வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோடியக்கரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக இதனைப் பார்க்க முடியும். கால்களை பின்னோக்கி நீட்டி இளஞ்சிவப்பு நிற கைகுட்டை காற்றில் பறப்பது போல் ஆகாயத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும், இதன் அழகு வியக்கத்தக்கது.

இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்ட இவ்வினத்தை சிறு செங்கால் நாரை என்பர். இதைவிட பெரிய இனம் அதிக சிவப்பு வண்ணத்தை கொண்டவை. கீழ்நோக்கி வளைந்து தொங்கும் இதன் சிவப்புமூக்கு சல்லடை போல் சிறு பூச்சிகளை சேகரிப்பதற்கு உதவுகிறது. நீளமான இதன் கழுத்து குனிந்து நின்றவாறு உணவைத் தேடவும் உதவுகிறது. வெள்ளை நிறஉடலில் இரு பக்கங்களிலும் சிறகுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நீளமான கால்களும் இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். இந்தியாவிற்கு குளிர்கால விருந்தாளிகளாக வரும் செங்கால் நாரைகள் குஜராத் மாநிலத்தில் மேற்கு எல்லையில் மட்டுமே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.

ஒரே சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை இடும். செங்கால் நாரை இனத்தில் சிறு செங்கால் நாரை என்ற இளஞ்சிவப்பு இனமே தமிழ்நாட்டிற்கு ஏராளமாக வருகிறது. விஞ்ஞானரீதியாக போயின் கோப் டேரிடே மைனா என்று அழைக்கப்படுகிறது. நீல வாத்து குளிர்கால இடப்பெயர்ச்சியின்போது 2,700 கிலோ மீட்டர் தூரத்தை 60 மணி நேரத்தில் கடக்கிறது. பறவைகளில் வல்லூறு, ராஜாளி போன்றவை மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். தாரா வாத்து 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். நாரையின் வேகம் 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரை இருக்கும். பருந்துகளின் வேகம் 50 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை. கடற்பறவைகளின் சராசரி வேகம் 60 கிலோமீட்டர் முதல் 80 கி.மீ. வரையாகும். வாத்துகளின் வேகம் மணிக்கு எழுபது கிலோமீட்டர். இவை ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு மணி நேரம் மட்டுமே பறந்து இடப்பெயர்ச்சிக்காக செல்கின்றன.

“சிறகை விரித்து வானை அளந்திடும்

சிறகு நண்பர்களையும்

நம் சிந்தையில் நிறுத்திடுவோம்!.”

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in