Published : 05 Oct 2023 04:35 AM
Last Updated : 05 Oct 2023 04:35 AM

திருப்பூர் காங்கேயம் அருகே கிராமசபை கூட்டங்களை கல்வி சபையாக மாற்றும் ஊராட்சி

காங்கயம் பழைய கோட்டைபுதூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்.

திருப்பூர்: ஒவ்வொரு கிராமசபை கூட்டத்தையும், கல்வி சபையாக மாற்றி அசத்தி வருகிறது காங்கேயம் பழைய கோட்டை புதூர் ஊராட்சி. திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம், பழைய கோட்டை கிராம ஊராட்சியில் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் அரசு பள்ளி வளர்ச்சி தொடர்பாக தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, முள்வாடிப்பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். பழைய கோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் சார்பில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:

இப்பள்ளியில் 170 குழந்தைகள் படித்து வருகிறார்கள். பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரம் உயர 1 முதல் 5 வகுப்புகளுக்கு தலா ஓர் ஆசிரியர் வீதம் இடைநிலை ஆசிரியர் நியமிக்க வேண்டும். 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக இடைநிலை ஆசிரியரைத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

பழைய கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கரையாம்பாளையம், நல்லம்மாள்புரம், சேமலைவலசு, இச்சிக்காட்டுவலசு, கஸ்பா பழையகோட்டை, ஊஞ்சமரம், கண்ணியங்கிணறு, குட்டப்பாளையம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த குழந்தைகள் 9-ம் வகுப்பில் சேருவதற்கு 7 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டி இருப்பதால் வரும் கல்வியாண்டில் பழைய கோட்டைபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் துறை மூலம்நியமிக்கப்பட்டுள்ள பள்ளியின் துப்புரவுபணியாளருக்கு மாதம்தோறும் தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தை உயர்த்தி அவர்களை முழு நேர துப்புரவுப் பணியாளராக நியமிக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் வாரம் ஒரு முறை பள்ளி வளாகத்தை துப்புரவு செய்து கொடுக்க வேண்டும்.

170 குழந்தைகளுக்கு சத்துணவு சமைத்தல் மற்றும் கழிப்பறைத் தண்ணீர் பயன்பாட்டுக்காக பள்ளிக்கென்று தனியாக ஆழ்குழாய் கிணறு மற்றும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தின் வடக்குப் பகுதியில் 17 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக பள்ளி ஆசிரியரும், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான சு.மூர்த்தி கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளி தீர்மானத்தை ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் நிறைவேற்றி வருகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த 2018-ம்ஆண்டு காலை சிற்றுண்டி திட்டத்தைநிறைவேற்ற வேண்டி, இதேபோன்றதொரு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தொடர்ந்து வலியுறுத்தினோம். இன்றைக்கு தமிழக அரசே காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாடுகளில், அரசு நிர்வாக அமைப்பு மக்களின் குறைகளை தொடர்ந்து களைந்தால் நிர்வாகம் சீராக இயங்கும். இது போன்ற கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தொடர்ந்து அரசு வெற்றிகரமாக செய்து தரும்போதுதான், மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்படும். இதை எங்கள் பள்ளி குழந்தைகளும், பெற்றோரும் உணர்ந்திருப்பதால், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தையும், பள்ளிக்கு தேவையானதை கேட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x