Published : 05 Oct 2023 04:45 AM
Last Updated : 05 Oct 2023 04:45 AM

ஏழை, எளிய மக்களுக்கான நலத் திட்டங்களில் தொய்வு, தாமதமின்றி பணியாற்றுங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்றுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற 2 நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல்நாளில், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த மாநாட்டு தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆட்சியர்கள், காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற இரண்டாம் நாளான நேற்று மாநாட்டின் நிறைவு விழா நடந்தது. இதில் முதல்வர் பேசியதாவது:

எந்தவொரு திட்டத்தையும் முதல்வரின் திட்டமாக, ஒரு கட்சி சார்ந்த திட்டமாகக் கருதாமல், அலுவலர்கள் அனைவரும் தங்கள் கனவுத் திட்டமாக, மக்களுக்கான திட்டமாக நினைத்து, அதை முழு ஈடுபாட்டோடு நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அது மக்களுக்கு நன்மை பயக்கும்.

திட்டங்களை அதிகாரிகளின் குழந்தைகள் என்பார்கள். அதிகாரிகள் நினைத்தால் அவை வளரும்; அதிகாரிகள் புறக்கணித்தால் அது மெலியும். அதிகாரிகள் என்பவர்கள் தனி மனிதர்களாக இருக்க முடியாது. செயல்படவும் முடியாது. அவர்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருந்து சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்பட வேண்டும். அத்தகைய காலம்தான் பொற்காலமாக அமையும்.

மாவட்ட ஆட்சியர்களால் மாவட்டங்களில் இயங்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்க இயலும். அதனை திறம்படச் செய்து, அரசுத் திட்டங்களின் மூலம் மக்கள் முழுப் பயனையும் பெறச் செய்ய வேண்டும்.

தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஏழை எளிய மக்களிடையே, குறிப்பாக, மகளிரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். இத்திட்டத்தில் சுமார் 1.63 கோடி மகளிருக்கு, எந்தவித சிரமுமின்றி, சீரிய முறையில் விண்ணப்பங்களை வழங்கி, பின்னர் பூர்த்தி செய்த படிவங்களைத் திரும்பப் பெற்றதே மாபெரும் சாதனையாகும்.

அந்த விண்ணப்பங்களைக் குறைந்த காலத்துக்குள் ஏற்கெனவே உள்ள தரவுகளுடன் கணினி தொழில்நுட்ப உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதன்மூலம் தகுதியுள்ள சுமார் 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கிக் கணக்கில் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைத்தது. அதே நேரத்தில், இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் தற்போது விண்ணப்பம் அளித்து வருகிறார்கள். அவற்றையெல்லாம் முறையாக, விரைவாகப் பெற்று, ஆய்வு செய்து, அவற்றின்மீது விதிகளின்படி தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் தொழில் துறையின் வளர்ச்சிக்காக பல கொள்கைகளையும் வெளியிட்டு, அந்நிய முதலீட்டாளர்களை ஈர்த்து, அதன்மூலம் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க அரசு அரும்பாடுபட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக, நம்முடைய திட்டங்களின் மூலம் கல்வி, சமூகம், பொருளாதாரம் என்ற அனைத்துத் தளங்களிலும் நம் மாநிலம் தற்போது சரியான பாதையில் நடைபோடுகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு நலம் தரும் திட்டங்களில் எந்தத் தொய்வும், தாமதமும் இல்லாதவாறு பணியாற்றுங்கள். இதனை நீங்கள் மனதிலே கல்வெட்டாகச் செதுக்கி வைத்துக் கொண்டு செயல்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு அது வளர்ச்சியைத் தரும். மகிழ்ச்சியைத் தரும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடங்குவதற்கு முன்னதாக உங்களது பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x