Published : 18 Aug 2023 04:30 AM
Last Updated : 18 Aug 2023 04:30 AM

ஜம்பையில் அவிழ்ந்த வரலாற்று முடிச்சு

முந்தைய காலம் தொடங்கி இப்போது வரை ஒர் ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது என்பது எத்தனை ஆச்சரியத்துக்குரியது. அப்படிப்பட்ட பெரும் வியப்பினைத் தரக்கூடிய ஊர் தான் ஜம்பை. திருக்கோவிலூர்அருகே தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இவ்வூர் குன்றுகளும் மலைப் பாறைகளும், சின்னஞ்சிறிய ஏரிகளும் சூழ்ந்து சம்புக்கோரைகள் தளைத்த பெரும் காடாக இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.

கற்காலம் முதல் தற்காலம் வரை: பல வரலாற்றுச் சான்றுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஜம்பையில் புதிய கற்கால கருவிகளும் கிடைத்துள்ளன. இவ்வூரைச் சுற்றி உள்ள வயல்வெளிகளில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள், குறியீடு பொறித்த பானை ஓடுகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், முதுமக்கள் தாழியின் தடித்த ஓடுகள், செங்கற்கள் கூரைவேயும் ஓடுகள், சுடுமண்ணால் செய்த காதணி, பாசி போன்ற பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் சோழர்கால காசுகள் இரண்டும் முஸ்லிம் ஆட்சி காலத்து காசு ஒன்றும் கிடைத்துள்ளது.

குகைக்கு செல்லும் வழி

சதிய புதோ - அதியன் நெடுமான் அஞ்சி: ஜம்பையின் தொன்மையை பறைசாற்றும் வண்ணம் அவ்வூரைச் சுற்றிஉள்ள குன்றுகளில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்றில்2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தஅதியமானின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி என்றுஎழுதப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்தஅதியனின் இந்த கல்வெட்டு இதுவரையிலான இந்திய வரலாற்றிற்கும் தமிழக வரலாற்றிற்கும் புதிய செய் தியைத் தரும் கல்வெட்டாகும்.

ஜேஷ்டாதேவி சிலை

அசோகரின் கல்வெட்டில் அதியமான்: அசோகரின் நான்கு கல்வெட்டுகளில் 'சதியபுத' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தன் எல்லைகளை குறிப்பிடும்போது மௌரிய அரசரான அசோகர் தன் சமகாலத்தவர்களான சேரர், சோழ, பாண்டியர்களை குறிப்பிட்டதோடு சத்தியபுத்திராவையும் குறிப்பிடுகின்றார்.

தலைநகர் காஞ்சிபுரம்: அசோகர் தன் கல்வெட்டில் குறிப்பிட்ட சேர, சோழர், பாண்டியர்கள் எவர் என்று அறிவதில் சிக்கல்கள் ஏதும் வரலாற்று ஆசிரியர்களிடம் இல்லை. ஆனால் சத்தியபுத்திரா யார் என்பதற்கு தெளிவான முடிவுவரலாற்று ஆசிரியர்களிடம் இல்லாதநிலை இருந்தது. 'சத்திய புத்திரா' சங்க இலக்கியங்களில் பேசப்படும் 'வாய்மொழி கோசர்' என்பவராய் இருத்தல் கூடும் என்றும் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்களாக இருக்கக்கூடும் என்றும் மகாராஷ்டிரத்தின் 'ஸத்புத்ரர்' என்பவராக இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.

அதியமான்: சேஷ அய்யர் என்பவர் 'ஸதிய புதோ'என்று அசோகர் தன் கல்வெட்டில் குறிப்பிடப்படுபவர் அதியமானாக இருக்கலாம் என மொழியியல் அடிப்படையில் கருதினார். சத்திய புத்திராஎன்போர் அதியமான் தான் என தெளிவுபட எடுத்துரைக்கும் சான்றாகஅமைகிறது ஜம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு. இவ்வாறு தமிழகவரலாற்றுக்கும் இந்திய வரலாற்றுக்கும் புதிய தெளிவினை தந்துள்ளது இக்கல்வெட்டு.

திருக்கோவிலூர் வெற்றி: அதியமான் தகடூரை (தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். அதியமானின் ஆட்சிக்கு உட்படாத தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள ஜம்பையில் அவரின் கல்வெட்டு இருக்கக் காரணம் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். மலையமான் திருமுடிகாரியுடன் திருக்கோவிலூரில் போரிட்டு வெற்றி பெற்று திரும்பும் வழியில் அங்கிருந்த சமண அல்லது பௌத்த துறவிகளுக்கு இப்பாளியை(படுகை) அதியமான் அமைத்துக் கொடுத்துள்ளார்.

தமிழிக் கல்வெட்டு

2000 ஆண்டுகளுக்கு முன்பு: தமிழகத்தில் கிடைத்துள்ள மிகப் பழைய கல்வெட்டுகளில் பிராகிருத சொற்கள் பல இருக்கின்றன" என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. தம்மம், ஸூதன்,புதஸ, போன்ற பிராகிருதச் சொற்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதமிழ் கல்வெட்டுகளில் உள்ளன என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் விதத்தில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது. சிக்கல்கள் மிகுந்த வரலாற்று முடிச்சு ஜம்பையில் அவிழ்க்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

- கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம், மதுரை மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x