

பொது அறிவில் கில்லாடியாகும் ஆவல் யாருக்குத்தான் இருக்காது! அதற்கான வழிவகை தெரிந்தால் நன்றாக இருக்குமே என எண்ணுபவர்களுக்கான வழிகாட்டி விநாடி-வினா மாஸ்டர் டி.கே.பத்மநாபன்.
பொது அறிவு மட்டுமன்றி வணிகம், கார்ப்பரேட் நிர்வாகம், நிதி, கர்னாடக இசை, கிரிக்கெட் எனப் பல்வேறு தலைப்புகளில் அகில இந்திய வானொலி, டிடி தமிழ், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள், தொழில்முறை அமைப்புகள், கல்லூரிகள், மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் எனப் பலவிதக் களங்களில் சிறப்பு விநாடி-வினா நிகழ்ச்சி களைக் கடந்த 40 ஆண்டுகளாக இவர் நடத்திவருகிறார்.
ஏற்றத்தை நோக்கி!
மாணவ சமுதாயத்துக்கும் நேயர் களுக்கும் பயனளிக்கும் வகையில், அகில இந்திய வானொலியில் இவர் நடத்திய பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று, ‘ஏற்றத்தை நோக்கி’. மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விரிவான கேள்வி-பதில் நிகழ்ச்சி இது.
சர்வதேசப் பொருளாதார ஒத்துழைப்பு, உலகளாவிய நிதி நிலைத் தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் ஆண்டுதோறும் ஜி20 மாநாடுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், 2023இல் புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பருவநிலை மாற்றம், பசுமை எரிசக்தி, நிலையான வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு, டிஜிட்டல் கட்டமைப்பு முதலானவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதனையொட்டி, அகில இந்திய வானொலிக்காக பத்மநாபன் நடத்திய, ‘G20 and India's Presidency’ விநாடி-வினா கவனம் பெற்றது. டிடி தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையில், ‘வழிகாட்டி’ எனும் வாராந்திர விநாடி-வினா நிகழ்ச்சியைத் தற்போது நடத்திவருகிறார்.
குடிமைப்பணி தேர்வர்கள், எம்பிஏ மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி மிகவும் பயனளிக்கும். புதன்தோறும் மதியம் 12:05 மணி முதல் 12:30வரை மணிவரை டிடி தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் காணொளிகள் யூடியூபிலும் பதிவேற்றப்படுகின்றன.
தொழில் நுணுக்கம்
இவைதவிர எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மைப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்குப் பொருளாதாரம், நிதி, வணிகம், வங்கி, பிராண்ட் வலிமை உள்ளிட்ட தலைப்புகளில் வணிக விநாடி-வினா நிகழ்ச்சிகளை உயர்கல்வி வளாகங்களில் இவர் நடத்திவருகிறார். சிறந்த மேலாண்மைத் தொழில் வாழ்க்கைக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதே இந்நிகழ்ச்சிகளின் நோக்கம்.
டி.கே.பத்மநாபன்
இந்திய மெட்டீரியல்ஸ் மேனேஜ் மென்ட் நிறுவனம் போன்ற தொழில் முறை அமைப்புகளுக்காகப் பல ஆண்டுகளாக விநாடி-வினா நிகழ்ச்சி களை இவர் நடத்திவருகிறார்.
இதன் மூலம் இளம் கார்ப்பரேட் நிபுணர்கள் வணிகக் கொள்கைகள், வரிவிதிப்பு தொடர்பான பரந்துபட்ட கார்ப்பரேட் தொழில் நுணுக்கங்களை அறிந்துகொள்ள முடியும்.
இசையும் ஆட்டமும்
கர்னாடக இசையிலும் இவருக்கு நாட்டம் இருக்கவே 2000த்தின் தொடக்கத்தில் தனியார் தொலைக் காட்சியில் கர்னாடக இசை சார்ந்த 40க்கும் அதிகமான விநாடி-வினா அத்தியாயங்களைத் தொகுத்து வழங்கினார். கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வத்தில் ‘டி20’, ‘ஒருநாள் போட்டி’ என கிரிக்கெட் குறித்து அகில இந்திய வானொலியில் பல போட்டிகளை நடத்தியுள்ளார்.
விநாடி-வினா மாஸ்டர் பத்மநாபன் நடத்தும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கல்லூரி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டவை. விநாடி-வினா போட்டிகளில் வெல்வதற்கு மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தனித்துவமான தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
“ஆர்வம் மிகவும் முக்கியம். அதுபோக, வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு அதுவே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்” என்கிறார்.
தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in