

விதைநெல் உற்பத்தி செய்யப்படும் வயல்கள்.
நம்மாழ்வார் வழியில் இயற்கை வேளாண்மைப் பணியில் ஈடுபட்ட நெல் ஜெயராமன், அழியும் நிலையில் இருக்கும் 400-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் கண்டறிந்து மீட்டெடுத்தார்.
அவரின் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி - சரவணகுமரன் தம்பதியினர், நாடு முழுவதும் இருந்து அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிச் சேகரித்துப் பாதுகாத்து வருகின்றனர்.
இவர்களின் பல ஆண்டுகால சீரிய முயற்சியின் விளைவாக, குரவப்புலத்தில் செயல்பட்டு வரும் ‘அறிவர்’ பாரம்பரிய விதை வங்கியில் தற்போது 2,200 நெல் ரகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இயற்கை விவசாயியான தந்தை சிவாஜி தொடங்கிய மரபு விதை சேமிப்பை, அவரது மகள் சிவரஞ்சனி ஆர்வ மிகுதியால் தன் கையில் எடுத்துக்கொண்டு மேலும் விரிவுபடுத்தினார்; அந்த அரிய பணிக்காகத் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
தற்போது அவரோடு சித்த மருத்துவரும் கல்லூரிப் பேராசிரியருமான அவரது கணவர் சரவணகுமரனும் இணைந்து, பாரம்பரிய விதைநெல் சேமிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
வளர்ச்சிப் பாதை
கடந்த 2015–16-ம் ஆண்டில் 170 பாரம்பரிய நெல் ரகங்களோடு இவர்களின் விதைநெல் சேமிப்புப் பயணம் தொடங்கியது. 2018–19-ல் 1,130 ரகங்களைச் சேகரித்திருந்த இவர்கள், 2025–26-ம் ஆண்டில் 2,200 விதைநெல் ரகங்களைச் சேகரித்துச் சாதனை படைத்திருக்கின்றனர்.