சமத்துவம் போற்றும் அறிவியல்

சமத்துவம் போற்றும் அறிவியல்
Updated on
2 min read

சூத்திரங்களால் நிரம்பியதாக பொதுவாக நம்பப்படும் அறிவியல், நிஜத்தில் உண்மைக்கான தேடல். அறிவியல் பாடத்தில் உள்ள கருத்துகளை சற்றே சிந்தனைபூர்வமாக உள்வாங்கத் தொடங்கினால் மாணவர்களின் எண்ணம் பரந்து விரியும்.

சாதி, மதம், இனம் போன்ற குறுகிய எண்ணங்கள் மறைந்து உலகம் ஒன்று, அதிலும் புவியே பிரபஞ்சத்தின் ஒரு சிறு புள்ளிதான் எனும் பேருண்மை புலப்படும். சாதி, மதம் இல்லை என்று வெறும் சொற்களால் சொன்னால் சிறுவர்களுக்கு ஆழமாகப் புரியாது, பெரியவர்களோ பெரும்பாலும் ஏற்பதில்லை.

ஆகவே, சமூகச் சிக்கலுக்கு அறிவியல் மனப் பான்மையே தீர்வு தர வல்லது என்பதை ‘அறிவியல் உணர்த்தும் சமூக சமத்துவம்’ எனும் நாடகத்தின் வழியாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள், திண்டுக்கல் மாவட்டம், மு.ஆசாரிப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள்.

மனிதநேய மலர்

பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வுடன் நடத்துவது அறிவியல் மனப்பான்மைக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் புறம்பானது என்பதே இந்த அறிவியல் செயல்பாட்டின் மையக்கரு. ஏழு வகைக் காய்கறிகளே இந்த நாடகத்தின் கதைமாந்தர்கள்.

தம்மில் யார் பெரியவர் என்பதில் காய்கறிகளுக்கு இடை யில் போட்டி. மோதிக் கொள்ளாதீர்கள் என்று கத்திரிக்காய் அறிவுரை கூறினால், காலிஃபிளவர், பூசணிக்காய், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் போன்றவை ஒப்புக்கொள்வதாக இல்லை.

புறத்தோற்றத்தில் மாறுபடும் காய்கறிகள் உயிரியல் ரீதியில் ஒன்றாக இருப்பது அறிவியல் விவாதத்தின் வழியாக நிறுவப்படுகிறது. இதே தர்க்கம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்கிற வாதம் அடுத்த கட்டமாக முன்வைக்கப்படுகிறது.

இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்க, அவரவர் சொந்த கிராமம், ஊர், மாநிலம், நாடு எல்லாவற்றையும் கடந்து உலகெங்கிலும் உள்ள அனைத்து மனிதர்களின் மரபணு அமைப்பு ஒன்றுபோல் இருப்பதை நிரூபித்துக் காட்டிய அறிவியல் ஆராய்ச்சி விளக்கப்படுகிறது.

இவ்வளவு ஆழமான கருத்தை அரசுப் பள்ளி மாணவிகள் பெரிய பிசகுகள் இன்றி 15 நிமிடங்களுக்கு மேல் சுவாரசியமாக நிகழ்த்திக் காட்டுகின்றனர். முக்கியமாக அறிவியலை சமூகவியலோடு இணைத்துக்காட்டும் விதம் வியப்பளிக்கிறது.

இதற்குத் திட்டமிட்டு செயல்வடிவம் கொடுத்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

அறியாமை இருளை விரட்டிய பிறகு அங்கு சமத்துவ ஒளி வீசி, மனிதநேய மலர் பூத்துக் குலுங்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு, சாதி ஒழிப்பைப் பேசும் இந்த அறிவியல்/

சமூகச் செயல்பாடு. பள்ளிதோறும் அறிவியலைப் பாடமாக மட்டும் படிக்காமல், இதுபோல் வாழ்க்கை முறையாகப் பயில்வோம், பயிற்றுவிப்போம்!

‘அறிவியல் உணர்த்தும் சமூக சமத்துவம்’ நாடகக் காணொளி: https://l1nq.com/3va83q4

சமத்துவம் போற்றும் அறிவியல்
உறையாத ரத்தமும்... ஓயாத போராட்டமும்! | நட்சத்திரக் குழந்தைகள் 17

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in