Published : 11 Jul 2022 06:18 AM
Last Updated : 11 Jul 2022 06:18 AM

ஸ்கைப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மலேசிய பள்ளி மாணவர்களுடன் ஆங்கிலம் படித்த ஆம்பூர் மாணவர்கள்

"ஸ்கைப்" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மலேசிய பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஆங்கிலம் பயின்ற ஆம்பூர் அரசு பள்ளி மாணவர்கள்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அரசு பள்ளி மாணவர்கள் மலேசிய பள்ளி மாணவர்களுடன் "விளையாட்டு முறையில்" ஆங்கிலம் கற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர்வட்டம், ரெட்டி தோப்பு பகுதியில் பெத்தலகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 376 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியைச் சேர்ந்த7-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சனா, திவ்யா, காவியா, ஹரிஷ் உள்ளிட்ட 10 பேர் மலேசிய பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு முறையில் ஆங்கிலம் கற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், "ஸ்கைப்" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விளையாட்டு முறையில் எளிமையாக ஆங்கிலம் பயில்வது எப்படி? என்பது குறித்து மலேசிய பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளிஆசிரியர் சரவணன் ஏற்பாடு செய்தார் "கஹூட்" என்னும் மென்பொருளை கொண்டு இணைய வழியில் வினாடி - வினாவை தயார் செய்து இரு நாட்டு மாணவர்களும் பங்குபெற்றனர். இதன்மூலம் அவர்கள்பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவை மேம்படுத்திக் கொண்டனர்.

மேலும், மொழி ஆற்றல், பொது அறிவுபெற்றதுடன் பிற நாட்டு மாணவர்களுடன் பயமின்றி சரளமாக உரையாடுதல் என பல்வேறு புதிய யுக்திகளையும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

ஆம்பூர் அரசு பள்ளி பள்ளி மாணவர்கள் ஏற்கெனவே ரஷ்யா, மொராக்கோ, இங்கிலாந்து நாட்டு பள்ளி மாணவர்களுடன் ‘ஸ்கைப்’ வழியாக உரையாடியிருக்கிறார்கள். மலேசியா ஆசிரியர் முஹம்மத் ரெட்ஜுவான், பெத்லகேம் ஆசிரியர் ஜெயசீலன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x