Published : 04 Jan 2023 06:06 AM
Last Updated : 04 Jan 2023 06:06 AM
சென்னை: அடுத்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடங்களை முன்கூட்டியே படிக்க வசதியாக வரும் மார்ச் மாதத்திலேயே அவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
பொதுத் தேர்விற்கு தயாராகும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கோடை விடுமுறையில் படிப்பதற்காக மூத்த மாணவர்களிடம் புத்தகங்கள் வாங்கி படிப்பதுண்டு. பல பள்ளிகளில் வகுப்புகள் எடுக்க தொடங்கி விடுவார்கள். வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
அடுத்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான ஒரு கோடி பாடப்புத்தகங்கள் மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும். ஏப்ரலில் புத்தகங்கள் விற்பனை தொடங்கும். அதனால் அடுத்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்கள் இந்த கோடை விடுமுறை முதலே தயாராகலாம்.
ஆண்டுதோறும் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்காக ஐந்து கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி 2022 டிசம்பரில் தொடங்கியது.
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தலைப்புகள் அச்சிடப்பட்டு வருகின்றன. மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி, மாநில கவுன்சிலில் இருந்து குறுந்தகடுகளைப் பெற்ற பிறகு விரைவில் தொடங்கும். ஆண்டு அட்டவணையின்படி எல்லா மாவட்ட பள்ளிகளுக்கும் மே இரண்டாவது அல்லது மூன்றாம் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
கல்வி உபகரணங்களான ஸ்கூல் பேக், காலணி, ஜியோமெட்ரி பாக்ஸ், கலர்பென்சில் மற்றும் கிரேயான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறந்த பிறகு விநியோகிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT