Last Updated : 02 Jan, 2023 06:02 AM

 

Published : 02 Jan 2023 06:02 AM
Last Updated : 02 Jan 2023 06:02 AM

அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க சிறப்பு திட்டம்: அமைச்சர் உதயநிதிக்கு மாணவர்கள் வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதர் மண்டிக்கிடக்கும் விளையாட்டு மைதானம்.

சென்னை

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று சாதனை படைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு, முதலில் அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இதற்கான முன்னெடுப்பை தமிழகஅமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும்வி்ளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தமிழக அரசு பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுக்களை மேம்படுத்த கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்க விளையாட்டுத் திருவிழாவும் நடத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், கலையரங்கங்கள் இல்லை. ஏற்கெனவே இருக்கின்ற பள்ளிகளில் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தரப்பில் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் பெரும்பாலானவற்றில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. ஏராளமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களோ, விளையாட்டு ஆசிரியர்களோ, பயிற்சியாளர் களோ கிடையாது. அதனால் இந்தப்பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில்பங்கேற்க முடியாமல் சிரமப்படுகின் றனர்.

பல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கின்ற மைதானங்களும் பராமரிப்பில்லாமல் புதர் மண்டி கிடக்கின்றன. சிறு மழைக்குகூட நீர் தேங்கி நிற்கிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகளிடம் விளையாட்டில் ஆர்வமில்லை. விளையாட்டு வகுப்பில் பிற பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை விளையாட்டில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதே இல்லை. இவை களையப்பட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அரசுப் பணிகளில் சிறப்பு ஒதுக்கீடு உண்டு என்ற மாணவரிடம் விழிப்புணர்வு இல்லை. எனவே, கலையரங்கம், விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் 37,391 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இவற்றை மாணவர்களிடம் வழங்கி விளையாட ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுப் பொருட்கள் வெறுமனே பள்ளிகளில் தேங்கி விடக்கூடாது.

ஸ்மார்ட்போன் பிடியிலிருந்து மாணவர்கள் விடுபட்டு பிடித்தமான விளையாட்டுகளில் ஈடுபட ஆசிரியர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வழிகாட்ட வேண்டும்.

ஸ்மார்ட் போன் போதையில் மூழ்கிக்கிடக்கும் மாணவர்களை மைதானங்களில் விளையாட வைக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும்பெற்றோர்களுக்கு உண்டு. விளையாட்டுகளில் தொழில்நுட்பம், நவீனமயம் ஒரு பக்கம் வேகமாக வளர்ந்து வந்தாலும் எதிர்காலத்திற்கு தரமான வீரர்களை உருவாக்குவது பள்ளியில் தான். அதற்கான அடித்தளம் பள்ளிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும்.

மாவட்டந்தோறும் ஸ்டேடியம் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மைதானங்கள் இல்லாதஅரசு பள்ளிகளில் அதிநவீன கட்டமைப்புகளுடன்கூடிய விளையாட்டு மைதானங்களை அமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x