Published : 02 Jan 2023 06:00 AM
Last Updated : 02 Jan 2023 06:00 AM

ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவுக்கு புதிய செயலி: இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது

சென்னை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவை பதிவு செய்வதற்கான புதிய செல்போன் செயலி இன்றுமுதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு வருவதில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. அடிக்கடி புகார் வரும் பள்ளிகளில் மட்டும் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகையைக் கண்காணிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

அனைத்துத் துறைகளும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறையையும் டிஜிட்டல் மயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப் பதிவை பதிவு செய்ய TNSED Schools என்ற செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்தது. இந்த செயலியில் பல்வேறு குறைகள் இருப்பதாக ஆசிரியர்கள், பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து குறைகள் களையப்பட்டு புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகள் TNSED Schools செயலி (App) மூலம் இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டது.

எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப் பதிவுக்கென மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டது.

இந்த செயலி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. அப்போது செயலி மற்றும் அதன்பயன்பாடு சிறப்பாக இருந்த நிலையில், ஜன.1 முதல் இதனை பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்த வேண்டும்.

ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (logout) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31-ம் தேதியுடன் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும். கூகுள் பிளே ஸ்டோரில் TNSEDAttendance செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே உள்ள பள்ளி ஆசிரியர்களின் Username, password-ஐ பயன்படுத்தி உள்நுழைவு (login) செய்துகொள்ள வேண்டும். உள் நுழைவுக்குப்பின் working status - Fully working என முன்இருப்பு தகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளூர் விடுமுறை அல்லது அரைநாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் (முற்பகல், பிற்பகல்), ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். புதிய செயலியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் வருகைப் பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய செயலி auto sync ஆகிவிடும் என்பதால், தனியாக sync செய்ய வேண்டாம். இணைய சேவை இல்லாத நேரத்தில் வருகைப் பதிவேடு கைபேசியில் இயந்திரத்தில் பதிவாகும். இணைய சேவை தொடர்பு ஏற்படும்போது அனைத்து தரவுகளும் தானாகவே update ஆகிவிடும். இணைய சேவை இல்லாத போது வருகைப் பதிவு மேற்கொண்ட பிறகு, Do not log out from the app, Do not click on the sync, Do not clear the app data or app caches ஆகிய நடைமுறைகளை தவறாமல் பின்பற்றி ஆசிரியர், மாணவர்களின் வருகைப் பதிவுகளை புதிய வருகைப் பதிவு செயலியில் ஜன.1 முதல் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து தலைமைஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை User manual என்ற இணைப்பிலும், User video என்ற வீடியோவிலும் தெரிந்து கொள்ளலாம் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜன.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த புதிய செயலி இன்றுமுதல் (ஜன.2) நடைமுறைக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x