Published : 13 Dec 2022 06:02 AM
Last Updated : 13 Dec 2022 06:02 AM

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க ஆவணம் வெளியீடு: ரூ. 5 கோடியில் பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம்

சென்னை

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் முக்கிய இடம் வகித்துள்ளது.

2021-2022-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், காலநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ‘தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம்' ரூ. 500 கோடி செலவில் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தியாவிலேயே நீண்ட கடற்கரை கொண்ட முதல் மாநிலமான தமிழகம் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக புயல்களையும் இயற்கை சீற்றங்களையும் சந்திக்க உள்ள நிலப்பரப்பில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்க மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்குரிய வழிவகைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு உயர் அலுவலர்கள், காலநிலை மாற்ற வல்லுநர்கள் மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு இம்மாநாட்டில் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க ஆவணம் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் இயற்கை மற்றும் கால நிலை மாற்றம் சார்ந்த துறை வல்லுநர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இரண்டு மாத கால அவகாசத்தில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

75 பக்கங்கள் கொண்ட தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க ஆவணத்தில் காலநிலை மாற்றத்தின் தற்போதைய நிலை, தமிழகத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கடற்கரைகளுக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம், திறன்மிகு கிராமங்கள் திட்டம், பசுமைப் புத்தாய்வுத் திட்டம் உள்ளிட்டவை தகுந்த ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விரிவாக அலசப்பட்டுள்ளன. இதில் பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் முக்கிய இடம் வகித்துள்ளது.

பிளாஸ்டிக் இல்லா பள்ளி: பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம்குறித்து இப்புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது: காலநிலை மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதால் அதற்கு தகுந்தவாறு தகவமைத்துக் கொள்ளவும் அதன் பாதிப்பை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட இளையோருக்கு தகுந்த பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. பசுமை புரட்சி இளம் தலைமுறையினரிடம் இருந்துதான் தொடங்கும்.

ஆகையால் குழந்தைகளும் இளைஞர்களும்தான் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். இந்நிலையில் தமிழக முதல்வரின் பசுமை இலக்கை நடைமுறைப்படுத்த மாநிலத்தில் 25 பசுமை பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சூரிய ஒளி தகடுகள் மூலம் எரிசக்தி உற்பத்தி செய்து பள்ளி பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பின்பற்றுதல், மூலிகை, காய்கறித் தோட்டங்கள் அமைத்தல், கனிதரும் மரங்களை நட்டு பராமரித்தல், சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்துதல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேர்வு செய்யப்பட்ட இந்த பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.

மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரங்களின் அருமை பெருமைகளை உணர்த்தவும், மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை உணர்த்தவும் அப்பள்ளிகளில் சூரிய ஒளி தகடுகளை அமைத்து, அதன்மூலம் பெறப்படும் மின்சாரத்தை பள்ளிகளின் பயன்பாட்டுக்கும், மின் மோட்டார் மூலம் அங்குள்ள மூலிகை, காய்கறித் தோட்டங்கள் அமைத்து, அப்பள்ளிகள் பசுமைப் பள்ளிகளாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பள்ளிகளுக்கு தலா ரூ. 20 லட்சம் என்கிற அடிப்படையில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை குறியீட்டு எண் இந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு பசுமை நடவடிக்கைகளில் அவை ஆற்றும் பங்களிப்பு பதிவு செய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x