Published : 30 Nov 2022 06:12 AM
Last Updated : 30 Nov 2022 06:12 AM

நடைப் பயணம் மேற்கொள்வதால் எனக்குள் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள்: மனம் திறந்தார் ராகுல் காந்தி

இந்தூர்: நாடு முழுவதும் மேற்கொண்டிருக்கும் நடைப் பயணத்தால் தனக்குள் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பல மாநிலங்கள் வழியே கடந்து சென்ற ராகுல், தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் நடைப் பயண அனுபவங்கள் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது:

நடைப் பயண அனுபவம் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது. எனக்குள் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் பற்றி சொல்ல விரும்புகிறேன். அதில் மிக முக்கியமானது இந்த நடைப்பயணம் தொடங்குவதற்கு முன்பிருந்ததை விட தற்போது எனது பொறுமை அதிகரித்துள்ளது. இரண்டாவது, என்னை எட்டு மணி நேரம் யாராவது இழுத்தாலும் தள்ளினாலும் கூட எரிச்சலடையமாட்டேன். ஆனால் முன்பெல் லாம் இரண்டு மணி நேரத்தில் என்னை யாராவது இடித்தால் கூட கோபம் வந்துவிடும்.

இந்த நடைப்பயணத்தில் இணைந்து நடந்தீர்களானால், மிகக்கடுமையான வலி ஏற்படும். அந்தவலியை தாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர, இதனை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் பிறக்கும். மூன்றாவதாக, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும் திறன் அதிகரித்திருக்கிறது. என்னிடம் யாராவது வந்து பேசினால், தற்போது அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதை பொறுமை யோடு முழுமையாகக் கேட்க முடிகிறது. இவை அனைத்துமே எனக்கு மிகுந்த பலனளிப்பவையாக உள்ளன.

இந்த நடைப்பயணத்தைத் தொடங்கிய போது, முன்பு ஏற்பட்ட காயத்தால் முட்டிகளில் வலி ஏற்பட்டது. இந்த வலியோடு நடக்க முடியுமா? என்று எனக்கு அச்சம் ஏற்பட்டது. நடைப்பயணத்தை தொடரமுடியுமா என்று கவலைப்பட்டேன்.ஆனால், அந்த பயத்தை நான் எதிர்கொண்டேன். தொடர்ந்து நடந்தேன். பிறகு அந்த பயம் நீங்கிவிட்டது. எப்போதும் நல்ல நிகழ்வுகள் நடக்கும், ஏதேனும் ஒன்று உங்களை துன்புறுத்தலாம், ஆனால் அதனை ஏற்க பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x