Published : 30 Nov 2022 06:04 AM
Last Updated : 30 Nov 2022 06:04 AM

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சி திருவிழா தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் முதல் முறையாக இரண்டு நாள் வண்ணத்துப்பூச்சி திருவிழா தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வல்லநாடு வெளிமான் சரணாலயம். இங்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கணக்கெடுப்பில் சுமார் 80 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டன.

வண்ணத்துப்பூச்சி திருவிழா தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வண்ணத்துப்பூச்சி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசும்போது, "காலநிலை மாற்றத்தால் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. மாசு தரும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாப்பிடும் உணவிலும், காற்றிலும் கூட பிளாஸ்டிக் கலந்துள்ளது. வீட்டு தோட்டங்களில் கூட மருந்துகளால் பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன.

வல்லநாடு வனப்பகுதியில் 100 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். இந்த வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த திருவிழா நல்ல முயற்சியாகும்" என்றார் அவர்.

வண்ணத்துப்பூச்சி குறித்த பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ணத்துப்பூச்சி வேடமணிந்து மாணவ, மாணவியர் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. கைகளில் வண்ணத்துப்பூச்சி ஓவியங்களை வரைந்தனர். கனிமொழி எம்பியின் கையில் மாணவி ஒருவர் வண்ணத்துப்பூச்சி ஓவியத்தை வரைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x