Published : 22 Nov 2022 06:13 AM
Last Updated : 22 Nov 2022 06:13 AM
புதுடெல்லி: பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வெள்ளம், வெப்ப அலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் பல மடங்கு அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் அதீத வானிலை நிகழ்வுகள் தொடர்பாக குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி-ஜி) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக கடந்த 1951 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதிகளில் கோடைக்காலத்தில் வெப்ப அலை, மழைக் காலத்தில் அதீத மழை ஆகியவற்றை ஆராய்ந்தனர். பாகிஸ்தானில் நடப்பாண்டில் ஏற்பட்ட வெப்ப அலை மற்றும் வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோன்ற அதீத வானிலை நிகழ்வு கள் இந்தியாவிலும் ஏற்படுகின்றன. இதனால் வேளாண் உற்பத்தி, பொது ஆரோக்கியம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஐஐடி-ஜி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வு முடிவு தொடர்பாக "ஒன் எர்த்' என்ற இதழில் கட்டுரை எழுதியுள்ளனர். அதில், பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் வெள்ளம், வெப்ப அலை போன்ற அதீத வானிலை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஐஐடி-ஜி கல்வி நிறுவன பேராசிரியர் விமல் மிஸ்ரா கூறுகையில் "உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசையும் தாண்டி அதிகரித்தால் அதீத வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும். மற்ற மாநிலங்களைவிட உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகியவை அதீத வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
கடந்த 1995 முதல் 1998 வரையிலான ஆண்டுகளில் கோடைக் காலத்தில் பெருமளவில் வெப்ப அலை இருந்ததை இந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 1981-2010 கால கட்டத்தில் வெப்ப அலை நிலவும் காலகட்டமாக 3 நாட்கள் இருந்தது. இந்த நூற்றாண்டு இறுதியில் வெப்பஅலை நிலவும் காலகட்டம் 33 நாட்களாக அதிகரிக்கும் என்று ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர். அதீத வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் பாதிக்கப்படும் மக்கள்தொகையின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT