Published : 27 Oct 2022 06:02 AM
Last Updated : 27 Oct 2022 06:02 AM

மாவட்ட கல்வி அதிகாரி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி தகவல்

சென்னை: மாவட்ட கல்வி அதிகாரி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் மாவட்டகல்வி அதிகாரி (டிஇஓ) பணியிடங்கள் 25 சதவீதம் நேரடி நியமன முறையிலும் எஞ்சிய 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமன முறையின் கீழ் மாவட்ட கல்வி அதிகாரிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். முதுகலை பட்டமும், பிஎட் பட்டமும் பெற்றவர்கள் இதற்கான போட்டித்தேர்வை எழுதலாம்.

அந்த வகையில், இந்த ஆண்டு 6 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு டிசம்பரில்முதல்நிலைத்தேர்வும், அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு மேமாதத்தில் மெயின் தேர்வும் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தனது வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையில் இன்னும் மாவட்ட கல்வி அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நேரடி மாவட்ட கல்வி அதிகாரி தேர்வுக்கான காலியிடங்களில் குறிப்பிட்ட இடங்கள் பொதுப்போட்டி மூலமாகவும், குறிப்பிட்ட இடங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கொண்டும் போட்டித்தேர்வு மற்றும்நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்த ஒதுக்கீடு தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகத்திடம் ஒருசில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளது. அவ்விவரங்கள் பெறப்பட்டதும் மாவட்ட கல்வி அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் தற்போது புதிய கல்வி மாவட்டங்கள் பல உருவாக்கப்பட்டிருப்பதால் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக மாவட்ட கல்வி அதிகாரி பணியில் சேருவோர் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, இணை இயக்குநர், இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெறுகிறார்கள். இளம் வயதில் பணியில் சேரும்பட்சத்தில் வருவாய்த்துறை அல்லாத பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x