Published : 22 Sep 2022 05:58 AM
Last Updated : 22 Sep 2022 05:58 AM

மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம்: அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு

சென்னை

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கிய நிலையில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பினாலும் கணிசமான மாணவர்களின் கனவாக இருப்பது மருத்துவ படிப்புதான். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுதோறும் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 5,050 இடங்கள் உள்ளன. அதேபோல் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இக்கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பில் 200 இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போய்விடும். எஞ்சியுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன.

தனியார் கல்லூரிகளைப் பொருத்தவரையில், மொத்தமுள்ள 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், அதேபோல், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் அரசு ஒதுக்கீட்டு வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சிய இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாக கருதப்பட்டு அந்தந்த கல்லூரி நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசால் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இக்கலந்தாய்வை அரசு சார்பில் மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பின்வரும் இணையதளங்களை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.tnhealth.tn.gov.in

www.tnmedicalselection.org

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி ஆகும். மருத்துவக் கல்லூரிகள், கல்விக்கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்முறை உள்ளிட்ட விவரங்களை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள விளக்கவுரையை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் ஒரு லட்சத்து 32,167மாணவர்கள் எழுதினர். அவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுப் பிரிவில் 720 மதிப்பெண்ணுக்கு 117-ம் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவில்93 மதிப்பெண்ணும் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். நீட் தேர்வில் அரசு பள்ளிமாணவர்கள் 2500-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 325 எம்பிபிஎஸ் இடங்கள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 130 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 13 பிடிஎஸ் இடங்கள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 101 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 569 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்கள் இந்த 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை பெற வேண்டுமானால் அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழை தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மருத்துவ படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்தவுடன் மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியாகும். அதன்பிறகு, விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் மருத்துவர் முத்துச்செல்வன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகியஆயுஷ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x